அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் மலைப்பாதையில் அதிர்ச்சி: அந்தரத்தில் தொங்கிய கார், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்!..
திருச்செங்கோடு:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு படி வழியாக ஏறிச் செல்ல ஒரு வழியும், வாகனங்களில் செல்ல ஏதுவாக மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவர்
மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே பாதுகாப்புக்காக குவி லென்சுகளும் பொருத்தப்பட்டுள்ளது.
மார்கழி மாத மரகத லிங்க தரிசனம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை மரகத லிங்க தரிசனம் நடைபெறும். இதைக்காண அதிகாலை நேரத்திலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
காரில் பயணித்த குடும்பத்தினர்
அதேபோல் இன்று காலை திருச்செங்கோடு சீதாராம்பாளையம் பகுதியை சேர்ந்த தரம்ஸ்ரீ என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.
கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதல்
அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் 3 பேரும் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள்
இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல்
மலைப் பாதையில் முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் மலைக்குச் செல்பவர்கள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மாற்றுப் பாதைக்கான கோரிக்கை
இதனால் மாற்றுப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
ரோப் கார் அமைப்பதற்கான திட்டம்
இதனைத் தொடர்ந்து ரோப் கார் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆய்வு செய்தபோது ரோப் கார் அமைக்க ஏதுவான இடமில்லை என திட்டம் கைவிடப்பட்டது.
மாற்றுப் பாதை அமைக்க வலியுறுத்தல்
அதனை தொடர்ந்து மாற்றுப் பாதை வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu