மீண்டும் சரிந்த முட்டை விலை..!

மீண்டும் சரிந்த முட்டை விலை..!
X
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து சரியும் முட்டை விலை..

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளில் இருந்து 40 காசு குறைத்து 4 ரூபாய் 20 காசுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டைகாக நான்கரை கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு தினசரி 3 கோடியே 70 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு சராசரியாக தினமும் 25 லட்சமும், கேரளா மாநிலத்திற்கு தினசரி ஒரு கோடி முட்டைகளும் அனுப்பப்படும் நிலையில் மீதமுள்ள முட்டைகள் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கேரளா மற்றும் வட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் முட்டை நுகர்வு வெகுவாகக் குறைந்து போன நிலையில் தமிழகத்திலும் விற்பனை சரிந்து மூன்று கோடி முட்டைகளுக்கு மேல் தேக்கம் அடைந்துள்ளது. விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கோழிப் பண்ணையாளர்கள் முட்டை விலையை வேகமாக குறைத்து வருகின்றனர்.

அதன்காரணமாக இன்று மீண்டும் ஒரே நாளில் 40 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு முட்டை அனுப்புவது தடை செய்யப்பட்டதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை அதிகளவு தேக்கம் ஏற்பட்டு கடந்த 4 நாட்களில் 90 காசுகள் வரை குறைக்கப்பட்டிருந்தாகவும் இருப்பினும் பண்ணைகளில் 3 ரூபாய் 70 காசுகளுக்கே முட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil