முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமை போயே போச்சு...
ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.
தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-
கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின், வருவாய்த்துறை அமைச்சர் ராஜன், பீர்மேடு எம்.எல்.ஏ., வாலுார் சோமன் மற்றும் 150 க்கும் மேற்பட்ட கேரள அரசியல் பிரமுகர்கள் சென்று முல்லை பெரியாறு அணையை திறந்து உள்ளனர். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை.
அணை கட்டி முடிக்கப்பட்டு 126 ஆண்டுகளாக தமிழக அமைச்சர்கள், தமிழக அரசு அதிகாரிகள் மட்டுமே அணையை திறந்தனர். இந்த வரலாற்றை மாற்றி முதன் முறையாக கேரள அரசியல் பிரமுகர்கள் சென்று முல்லை பெரியாறு அணையை திறந்துள்ளனர். முல்லை பெரியாறு அணை மரபு உடைக்கப்பட்டுள்ளது.
அணையை திறக்கும் அதிகாரம் கொண்ட தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் அணைக்கு ஏன் செல்லவில்லை. அவரை யார் தடுத்து நிறுத்தினர் என்பது தெரியவில்லை. முதலில் இரண்டு ஷட்டர்கள் வழியாக விநாடிக்கு 586 கனஅடி நீரை திறந்தவர்கள், இன்று 3 ஆயிரம் கனஅடியாக உயர்த்தி உள்ளனர். ஆறு ஷட்டர்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டு அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
தற்போது தமிழக அரசு தனது உரிமையை விட்டுக்கொடுத்து விட்டது. இது மிக, மிக வேதனையான விஷயம். முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் கேரள அரசுடன் தி.மு.க., அரசு செய்து கொண்ட சமரசத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். இந்த விஷயம் எங்களுக்கு மிகப்பெரிய மனவலியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் மறவ மங்கலம் விரிவாக்க பகுதிக்கு தண்ணீர் போகவில்லை. சிங்கம்புணரி கால்வாய்க்கு தண்ணீர் போகவில்லை. சோழபுரத்திற்கும் தண்ணீர் செல்லவில்லை. திருப்பாச்சேத்தி, மானாமதுரை பகுதிகள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் இருந்த விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலுக்கு வெளியேறி வருகிறது. வைகை அணை நிரம்ப இன்னும் ஏழு அடி தண்ணீர் தேவை. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் மழையளவு குறைந்து வருகிறது. எந்த நேரமும் மழைப்பொழிவு குறைந்து விடும். எனவே தமிழக அரசு முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கேரள அதிகாரிகள், கேரள அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் தினமும் முல்லை பெரியாறு அணைக்கு வந்து செல்வதை தடுக்க வேண்டும். அணையை குறிப்பிட்ட சிலர், குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதிகள் உள்ளன. இதனை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu