தண்ணீர் அரசியல் செய்கிறாரா, நடிகர் பிரிதிவிராஜ் ? கொதிக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்

தண்ணீர் அரசியல் செய்கிறாரா, நடிகர் பிரிதிவிராஜ் ?  கொதிக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்
X

கேரள நடிகர் பிரிதிவிராஜ் 

முல்லை பெரியாறு அணை விவகாரத்தை நடிகர் பிரிதிவிராஜ் கையில் எடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முல்லை பெரியாறு அணை கேரள எல்லைக்குள் இருந்தாலும் அதை நிர்வாகம் செய்வது தமிழக பொதுப்பணித்துறைதான். தற்போது முல்லை பெரியாறு அணை விவகாரமே 'டாக் ஆஃப் த கண்ட்ரி' ஆகியுள்ளது. கொரோனா பரவல், மழை வெள்ளம்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு இதையெல்லாம் தாண்டி நிற்கிறது முல்லைப்பெரியாறு.

1979ம் ஆண்டிலேயே மலையாள மனோரமா முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து என்று செய்தியை வெளியிட்டு பரபரப்பை தொடங்கி வைத்தது. அந்த நேரத்தில் கேரள அரசு அணையில் நீர்கொள்ளளவை 152 கன அடியிலிருந்து 136 கன அடியாக குறைத்தது. கேரள மக்கள் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்கின்றனர். அதனால் அந்த அச்சம் நீக்கப்படவேண்டும். மேலும் தமிழகம் பெரியாறு அணையை வலுப்படுத்த முயற்சிகளை செய்ய வேண்டும். அதன் பின் அணையின் நீர் மட்டத்தை 152 கன அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று கேரள அரசு கூறிவிட்டது.

அதைத்தொடர்ந்து தமிழகம் அணையை செப்பனிட்டு வலுப்படுத்தியது. ஆனால், அதன் பின்னரும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பின்னரே பெரியாறு அணை பிரச்னை உச்சநீதி மன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. உச்சநீதி மன்றம், வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அந்த அறிக்கையின்படி, 2006ம் ஆண்டில் 142 கன அடி வரை நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முல்லை பெரியாறு அணை

ஆனால், கேரள அரசு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்தது. சட்டமன்றத்தில், முல்லைப் பெரியாறு அணையின் அதிகபட்ச உயரத்தை 136கன அடியாக நிர்ணயம் செய்து புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றினார்கள். அந்த சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் எச்.எல்.தத்து, சந்திரமவுலி பிரசாத், மதன் லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகியோர் அடங்கிய பென்ச் 2014ம் ஆண்டு மே 7ம் தேதி தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பு :

1. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுத்து கேரள அரசு சட்டம் நிறைவேற்றி இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே, அச்சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

2. மத்திய நீர்வளக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தலைவராகக் கொண்ட மூன்று பேர் குழுவின் கண்காணிப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 கன அடியாக உயர்த்தப்பட வேண்டும். 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இக்குழு அமல்படுத்த வேண்டும்.

3. இந்த குழுவில் தமிழகம் சார்பில் ஒருவரும் கேரளா சார்பில் ஒருவரும் உறுப்பினராக இருக்க வேண்டும். இக்குழுவின் அலுவலகம் கேரளத்தில் அமைய வேண்டும்.குழுவின் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்.

4. இந்த குழு அணையின் நீர்மட்டத்தை உறுதி செய்வதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாதுகாப்பு குறித்து கண்காணிக்கும்.

5. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் சார்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள இக்குழு அனுமதி அளிக்க வேண்டும். அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் இக்குழு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அந்த உத்தரவை இரு மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டும்.

6. புதிய அணை கட்டும் விஷயத்தில், கேரள அரசு தன் முடிவை தமிழகத்தின் மீது திணிக்க முடியாது. புதிய அணை கட்டுவதென்றால், அது இரு மாநில அரசுகளின் ஒப்புதலுடன்தான் நடைபெற வேண்டும்.

ஆக, முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில்லை என்ற கோஷம் இன்றைக்கு அல்ல 1979ம் ஆண்டிலேயே மலையாள மனோரமா செய்தியாக்கி பரப்பிவிட்டது. அந்த நெருடல் இன்றுவரை தொடர்கிறது.

நடிகர் பிரிதிவிராஜ் :

தமிழ் சினிமாவில் நடித்து இங்கு பணம் சம்பாதித்த நடிகர் பிரிதிவிராஜ் கேரள மக்களுக்கு பெரியாறு அணையால் பாதுகாப்பில்லை என்று கொளுத்திப்போட்டார். அது மீண்டும் பற்றி எரிகிறது. நடிப்பதற்கு படம் இல்லாத சூழலில் கேரள மக்களின் பார்வை அவர் மீது விழவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படி கூறிவிட்டார் என்று பலர் அவரை விமர்சனம் செய்கின்றனர். தமிழ் திரையுலகினரும் கொந்தளித்துவிட்டனர்.

கேரள முதலமைச்சரின் அறிக்கை :

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரது அறிக்கையால் அவர் ஒரு சிறந்த முதல்வர் என்பதை நிரூபித்துள்ளார். புரளியை நம்பாதீர்கள். புரளி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.முல்லைப்பெரியாறு அணை உறுதியாகவே உள்ளது. கேரள மக்கள் அச்சப்படத்தேவை இல்லை என்று நம்பிக்கை விதைத்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் தூண்டுதலா?

நடிகர் பிரிதிவிராஜ் இவ்வாறு பேசுகிறார் என்றால், அவருக்கு பின்னணியில் அரசியல் கட்சிகள் உள்ளனவா என்ற சந்தேகமும் எழுகிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் தேனி, மதுரை, திண்டுக்கல்,ராமநாதபுரம்,சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது. கேரளா புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளதும் நாம் அறிவோம். தமிழகம் சம்மதித்தாலன்றி கேரளா தனித்து அணை கட்டமுடியாது என்பதை உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் உறுதிகூறியுள்ளது.

அதனால், முல்லைப்பெரியாறு அணையின் முழு தண்ணீரையும் கேரளாவே பயன்படுத்திக்கொள்ள ஒரு புதிய யுக்தியை அங்குள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டதின் வெளிப்பாடுதான் நடிகர் பிரிதிவிராஜ் குரல் கொடுத்ததின் பின்னணியாக இருக்கலாமோ என்று தமிழக மக்களும் சந்தேகம் கொண்டுள்ளனர்.

தமிழக நிலை :

தமிழகம், கேரளத்தில் நடக்கும் அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வாதத்திலும் கேரள அரசுத் தரப்பு வழக்கறிஞர், கேரளாவில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், பெரியாறு அணையில் 137 கன அடி நீர் மட்டும் தேக்கிவைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, அணையில் 137 கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. பாதுகாப்பை கருத்தில்கொண்டு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றார்.

நீதிபதிகள் மாநில அரசுகளுக்கிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதை வலியுறுத்தி கவலை தெரிவித்தனர். இது மக்களின் பாதுகாப்பு விஷயம் சார்ந்தது. மக்கள் அச்சம் கொள்வதை கருத்தில்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்தில் நேரடியாக நாங்கள் தலையிட முடியாது. இரு மாநில அரசுகளுடனும் அணை பாதுகாப்பு குழு விரைந்து பேசி, எவ்வளவு நீரை தேக்கி வைக்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டனர்.

அரசுகள் பேச்சுவார்த்தை :

அணை பாதுகாப்புக் குழு, இரு மாநில அரசுகள் என்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தை, நடிகர் பிரிதிவிராஜ் கையில் எடுப்பதன் நோக்கம் என்ன? ஒரு கேரள நடிகராக மட்டுமே இருந்து இந்த பிரச்னையை அணுகாமல் ஒரு கலைஞனாக இருந்து இந்த பிரச்னையை அவர் அணுகவேண்டும். தண்ணீர் அரசியலை ஒரு கலைஞன் கிளப்பிவிட்டுவிட்டான் என்ற அவப்பெயரை பிரிதிவிராஜ் சம்பாதித்துவிடக்கூடாது . தமிழ் சினிமாவில் நடித்ததை பிரிதிவிராஜ் மறந்துவிடக்கூடாது.

பெரிய நடிகர்கள் :

கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்கள் மீது தமிழ் ரசிகர்கள் அளவற்ற அன்பு வைத்துள்ளனர். அவர்கள் இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் கூறவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் இருவரும் நடிப்பிலும்,அறிவிலும் முதிர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் எடுக்கும் முடிவுகளும் பாதகமற்றதாகவே இருக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!