உள்ளாட்சி தேர்தலில் வேகமாக சுழல்கிறது அரசியல் நிழல் உலகம் (Exclusive)

உள்ளாட்சி தேர்தலில் வேகமாக சுழல்கிறது அரசியல் நிழல் உலகம் (Exclusive)
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் அரசியல் நிழல் உலகம் அதிக வேகமாக சுழல தொடங்கி உள்ளது.

இந்தியாவில் மூன்று வகையான அரசியல்களம் உள்ளது. ஒன்று நேரடி அரசியல் களம். இதில் இருப்பவர்கள் அத்தனை பேரும் ஆட்சி, அதிகாரத்தில் நேரடியாக பங்கு பெறுவார்கள். இரண்டாவது மறைமுக அரசியல் இவர்களை பற்றியும் அத்தனை பேருக்கும் தெரியும். இவர்கள் எப்போதுமே மதில்மேல் பூனையாக இருப்பார்கள். எல்லோருக்கும் ஆதரவு தெரிவித்து விட்டு ஆளும் கட்சி மீதும், ஓடும் குதிரை மீதும் சவாரி மட்டுமே செய்வார்கள். ஆனால் முழு நேர அரசியல்வாதி போல் காட்டிக்கொள்வார்கள். ஆட்சி அதிகாரம் என்பது இவர்களுக்கு கடைசி வரை கனவு மட்டுமே.

கிங் மேக்கர்ஸ் :

இன்னொன்று உள்ளது. அது தான் நிழல் அரசியல். இந்த நிழல் அரசியல் உலகம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பரவி உள்ளது. இவர்கள் தான் கிங் மேக்கர்கள். அதாவது யார் எம்.எல்.ஏ.,வாக வர வேண்டும். யார் எம்.பி.,யாக வர வேண்டும். யார், யார் அமைச்சர்களாக வேண்டும். எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். இந்த நிழல் அரசியல் உலகம் தான் மிகவும் டேஞ்சரஸ். பல நேரங்களில் இவர்கள் முதல்வர் பதவியை கூட தேர்ந்தெடுக்கும் நிலையை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருப்பார்கள். மத்திய அரசில் கூட இவர்களது ஆளுமையே எதிரொலிக்கும்.

இப்படிப்பட்ட நிழல் அரசியல் உலகம் தாங்கள் வாழும் பகுதியில் யார் உள்ளாட்சி பிரதிநிதியாக வர வேண்டும் என்பதில் தலையிடாமலா இருப்பார்கள்? பெரும்பாலான இடங்களில் யார் ஜெயிக்க வேண்டும் என்பதை கூட இவர்கள் தான் தீர்மானிப்பார்கள். இந்திய அரசியல் நடைமுறை தெரிந்த அத்தனை பேருக்கும் இவர்களைப் பற்றி தெரியும். எப்போதும் மத்திய, மாநில அரசுத்துறைகள் இவர்கள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்கும்.

காரணம் இவர்கள் பல நேரங்களில் சட்டம் ஒழுங்கையும், ஓட்டுப்பதிவு சதவீதத்தையும் கூட தீர்மானிக்கும் அசுர சக்தியாக உருவெடுப்பார்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இவர்களை அனுசரித்தே செல்ல வேண்டிய நிலையை உருவாக்குவார்கள்.

நிர்ணயம் :

இந்த நிலையில் தான் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் யார் யார் ஜெயிக்க வேண்டும்? யார் யார் எந்தெந்த பதவிக்கு (தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்) பதவிக்கு வர வேண்டும்? என்பதை பல இடங்களில் நிர்ணயிப்பார்கள். இவர்கள் தங்களது வேட்பாளரை (இது கடைசி வரை ரகசியமாக இருக்கும்). வெற்றி பெற வைக்க நடத்தும் சதுரங்க ஆட்டத்தை நுாறு பிரசாந்த் கிஷோர்கள் வந்தாலும் கணிக்கவே முடியாது. எதிர்கொள்ளவும் முடியாது. அந்த அளவு இந்த நிழல் அரசியல் உலகத்தின் திட்டமிடல் நுட்பமாகவும், துல்லியமாகவும் இருக்கும். இதனால் தான் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறைகள் மண்டையை குழப்பிக் கொண்டுள்ளன.

ஜெயிக்கப்போவது யாரு ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் ஓரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிழல் அரசியல் உலகம் அதிக வேகமாக சுழல்கிறது. இப்போதைய தமிழக அரசியல் சூழலில் நேரடி அரசியல் களம், மறைமுக அரசியல் களம், நிழல் அரசியல் உலகம் மூன்றுமே ஆளும் கட்சிக்கு ஆதரவாக சுழல்கிறது. இதனால் ஆளும் கட்சி நிச்சயம் நகர்ப்புற தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெறும் என உளவுத்துறைகளின் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!