தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு; அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைவு

தமிழகத்தில் இன்று துக்கம் அனுசரிப்பு; அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைவு
X
தமிழர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா விரைந்துள்ளனர்.

ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுராவில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் இன்று இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடம் அருகே வந்தபோது அந்த ரயிலின் மீது ஒரு சரக்கு ரயில் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினால் பயணிகள் அய்யோ அம்மா என அலறினார்கள். இந்த விபத்தில் இதுவரை 230 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தோரின் எண்ணிக்கை 900 ஆக உள்ளது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், புவனேஸ்வரில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தார் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒடிசாவில் இன்று துக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழ்நாட்டின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் முதல்வர் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து செல்லுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்காக 3 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒடிசா ரயில் விபத்து சிறப்பு உதவி மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழக பயணிகளின் விபரங்கள் மற்றும் ரயில் விபத்து மீட்புப் பணிகள் தொடர்பான விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நாட்டையை உலுக்கிய ஒடிசாவில் நடைபெற்ற இந்த கோர இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (3.6.2023) ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை நடக்க விருந்த கருணாநிதி 100 வது பிறந்தநாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் விபத்துக்குள்ளானோர் குறித்து தகவல்களை பெற 044 28593990 மற்றும் 9445869843 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!