கோவையில் 65 ஆண்டு கால அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு

கோவையில் 65 ஆண்டு கால அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு
X

கோவையில் அரச மரத்திற்கு அடியில் கண்டு பிடிக்கப்பட்ட கிணறு.

கோவையில் பாலம் கட்டுபதற்காக தோண்டிய போது 65 ஆண்டு கால அரச மரத்திற்கு அடியில் அதிசய கிணறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

கோவை அவினாசி சாலை மேம்பால கட்டுமான பணியின் போது 65 ஆண்டு பழமையான அரச மரத்தை மறுநடவு செய்ய வேரோடு பிடுங்கிய போது அதிசயமான பழமையான கிணறு ஒன்று காணப்பட்டது. அந்த கிணற்றில் தண்ணீரும் இருந்தது. இதை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.

சென்னையில் அண்ணா சாலை என்றால், கோவையில் அவினாசி ரோடு தான் பிரதான சாலை, கோவையின் மையப்பகுதியில் செல்லும் இந்த சாலையில் எப்போதுமே கடுமையான வாகன நெரிசல் இருக்கும். இது ஒருபுறம் எனில் ஏராளமான சிக்னல்கள் இருப்பதால் உக்கடத்தில் இருந்து கருமத்தம்பட்டி செல்வதற்கே பீக் அவர்ஸில் நீண்ட நேரம் ஆகும்.

இந்த சூழலில் வாகன நெரிசலை குறைக்க கோவை அவினாசி ரோட்டில் உப்பிலி பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தில் லட்சுமி மில் சிக்னல், பீளமேடு உள்ளிட்ட 4 இடங்களில் ஏறு தளம், இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டுவதற்கு மரங்கள் எங்குமே வெட்டப்படவில்லை. ஆனால் ஆனால் இறங்குதளம் மற்றும் ஏறுதளம் அமைக்க சாலையோரங்களில் உள்ள மரங்கள் இடையூறாக இருந்தன.

இதையடுத்து அந்த மரங்களை வெட்டுவதுடன், வேறுடன் பிடுங்கி வ.உ.சி. மைதானத்தில் மறு நடவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர். இதன்படி முதற்கட்டமாக அவினாசி ரோட்டில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடம் முன் இறங்கு தளம் அமைக்க இடையூறாக காணப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் மற்றும் 25 ஆண்டுகள் பழமையான சேவல் கொண்டை பூ மரம் ஆகிய 2 மரங்களை வேருடன் பிடுங்கி மறு நடவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த பணியை கிரீன்கேர் அமைப்புடன் இணைந்து நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டார்கள்.

இதில் அரச மரத்தை வெட்டி அகற்றும் போது அந்த மரத்திற்கு அடியில் பழமையான கிணறு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் 12 அடி சுற்றளவில் இருந்துள்ளது. இந்த மரத்தை வெட்டி வேருடன் பிடுங்கிய போது இந்த மரத்திற்கு அடியில் 40 அடி ஆழ கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றின் குறுக்கே 2 ராட்சத இரும்பு கம்பிகள் இருந்தது.. கிணற்றின் ஓரம் வளர்ந்த அரசமரம், இப்போது கிணற்றையே மூடிவிட்டது தெரிந்தது. கிணற்றில் தற்போதும் தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றை ஆச்சரியத்துடன் பலரும் பார்த்து செல்கிறார்கள். இதனிடையே அவினாசி சாலையில் வேருடன் பிடுங்கப்பட்ட அரச மரம் மற்றும் சேவல் கொண்டை பூ மரம் ஆகியவற்றை கோவை வ.உ.சி மைதானத்தில் மறு நடவு செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளை கிரீன்கேர் அமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக பல்வேறு இடங்களிலும் மிக பழமையான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் தான் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்படுகிறது. கோவையை போல் அனைத்து இடங்களிலும் இதுபோல் நட வேண்டும் என்பது மரம் ஆர்வர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!