விழி பிதுங்கும் நிதி அமைச்சகம்.. ஓய்வூதியர்களால் அதிகரிக்கும் நிதிச்சுமை
பைல் படம்.
தமிழக நிதி அமைச்சகம் எதிர்பாராத நிதிச்சூழலில் சிக்கி திணறுகிறது. தமிழக அரசின் கடன் மட்டும் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயினை எட்டி உள்ளது. மின்வாரியம் தனியாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது. அரசு போக்குவரத்துக்கழகம் 36 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது.
இதனிடையே தமிழக அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையாக இருப்பது ஓய்வூதியம் வழங்குவது தான். தற்போது தமிழகத்தில் 7 லட்சத்து 31 ஆயிரத்து 559 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். தற்போது பணிபுரிபவர்களில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 834 பேர் பழைய ஓய்வூதியம் பெற தகுதி உள்ளவர்கள். ஓய்வூதியம் பெறுபவர்களில் 80 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்கள் 43 ஆயிரத்து 50 பேர். 85 முதல் 89 வயது வரை உள்ளவர்கள் 24, 503 பேர். 90 முதல் 94 வயது வரை உள்ளவர்கள் 6, 287 பேர். 95 முதல் 99 வயது வரை உள்ளவர்கள் 1020 பேர். 100 வயதை தாண்டியவர்கள் 138 பேர். இதனால் அரசு நினைத்தாலும் இன்னும் 30 ஆண்டுகளுக்கு ஓய்வூதிய செலவுகளை குறைக்கவே முடியாது.
இந்நிலையில் கடந்த மே 31ம் தேதி ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் ஓய்வு பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். இவர்களது பணப்பலன்களை செட்டில் செய்ய முடியாமல் தமிழக அரசின் நிதித்துறை திணறுகிறது. குறிப்பாக போக்குவரத்து ஊழியர்கள் மட்டும் இதில் 1075 பேர். ஏற்கனவே ஓய்வு பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் பல ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் நிலையில், இந்த சிக்கலும் அரசுக்கு புதிய பிரச்னையாக முளைத்துள்ளது.
இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் தமிழக அரசு தேவையில்லாமல் பல செலவுகளை செய்கிறது. இதனால் அரசு ஊழியர்கள் நியாயம் கேட்கும் போது, யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பற்றி ஏற்கனவே எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக பரவி வரும் நிலையில், அவரும், தமிழக முதல்வரும் என்ன செய்யப்போகிறார்கள் என ஒட்டுமொத்த தமிழகமும் காத்திருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu