கேரள சாலைப்பணிக்கு தமிழக மண், மணல், கல் கடத்தல்

கேரள சாலைப்பணிக்கு தமிழக மண், மணல், கல் கடத்தல்
X

கோப்புப்படம் 

கேரளாவில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 ன் பணிகளுக்காக, தமிழக எல்லையோர மாவட்டங்களின் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது.

காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வந்து சேரும் தேசிய நெடுஞ்சாலை 66 மகாராஷ்டிராவின் பன்வேலி நகரில் இருந்து தொடங்குகிறது. கிட்டத்தட்ட 66 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலை எண் 66ன் பணிகள் கேரளாவில் தீவிரமெடுத்திருக்கிறது.

கோவா, கர்நாடகா, வழியாக மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இணையாக, இந்தியாவின் மேற்கு கடற்கரையை வடக்கு தெற்காக இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை, ஒரு பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை ஆகும். ஆறு வழிச்சாலையாகவும், இருபுறமும் இரு வழி சேவைச் சாலையாகவும் மேம்படுத்தப்படும் இந்த சாலைக்கான கட்டுமான பணிகளில், தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கனிம வளங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அண்மையில் ஆலப்புழா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

நாட்டிலேயே மிக நீளமான சாலை மேம்பாலம், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள, துறவூர் முதல் அரூர் வரை அமைக்கப்படுகிறது. இதனுடைய மொத்த நீளம் 12.34 கிலோ மீட்டர். ஆறு வழிச்சாலையாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் பயண நேரமும் மிச்சமாகும், வர்த்தக வாய்ப்பும் கூடும் என்று கருதுகிறது கேரள மாநில அரசு.

ஆனால் நீளமான மேம்பாலம் சமன் செய்யப்பட வேண்டி இருப்பதால், தரமான மண்ணையும், பாறை பொருட்களையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் கேரளாவில் உள்ள கனிம சுரங்கத் துறை காட்டும் கடுமையான கட்டுப்பாடுகளால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அவ்வளவு எளிதாக தனக்கு தேவையான பொருட்களை கேரளாவில் பெற முடியவில்லை.

உடனடியாக கட்டுமான பொருட்கள் தேவை என்றால், மாவேலிக்கரையிலோ, பத்தனம்திட்டாவிலோ தான் பெற முடியும் என்கிற நெருக்கடி எழுந்ததோடு அங்கும் அவ்வளவு எளிதாக அனுமதி கிடைப்பதாக தெரியவில்லை.

உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கேரள முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியும் கேரள மாநில கனிம சுரங்கத் துறை அசைந்து கொடுக்கவில்லை.

மேம்பாலத்திற்கான தூரம் அதிகம் என்பதாலும் தரமான பொருட்கள் வேண்டும் என்பதாலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், தமிழகத்திலிருந்து ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் கனிம வளங்களோடு, இன்னும் கூடுதலாக பெறுவதற்கு தமிழக அரசை அணுகப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குமரி பாறசாலை வழியாகவும், செங்கோட்டை புளியரை வழியாகவும், தேனி-குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாகவும், ஆயிரக்கணக்கில் தினமும் கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கும் கனிம வள பொருட்கள் தேசிய நெடுஞ்சாலை எண் 66 க்காக பயன்படுத்துகிறது. இப்போது அதை கேரள மாநில கனிம சுரங்கத் துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

கேரள முதல்வர் அலுவலகம் நேரடியாக தலையிட்டும் கனிம சுரங்கத்துறை அதிகாரிகள் அசைந்து கொடுக்க மறுக்கிறார்கள் என்றால் அதுபோன்ற அதிகாரிகள் தான் தமிழகத்திற்கும் தேவை. தற்போது தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி கொண்டு செல்லப்படும் கனிமங்கள் எல்லாம்,பெரு முதலாளிகளால் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. சின்ன சின்ன வியாபாரிகளுக்கு இங்கு வேலையே இல்லை.

பெரிய அளவிலான சாலை மற்றும் கட்டுமான நிறுவனங்கள், தங்கள் ஆட்கள் மூலம் நேரடியாகவே தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை கடத்திச் செல்வதால், நெருக்கடியும் குறைவாக உள்ளது.

66,000 கோடி ரூபாய் செலவில் மீள் கட்டமைக்கப்படும், 66 ம் எண் தேசிய நெடுஞ்சாலைக்கான கட்டுமான பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுவதுமாக பெற்று விடுவது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருந்தால் அதைவிட பெருந்துயரம் தமிழகத்திற்கு எதுவும் தேவை இல்லை.

தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த கனிம வள கடத்தல் விவகாரத்திலும் முதல்வர் கவனம் செலுத்தினால் அதைவிட மகிழ்ச்சி வேறு என்ன இருந்து விட முடியும். என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க அனைத்து நிலை நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!