மிக்ஜாம் புயல் பாதிப்பு: ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் (HELP DESK) சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்க் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் அவர்களிடம் நேரில் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வுசெய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வலத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனும் உடன் வருகிறார். இவர்கள் மழை வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்ட சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வுசெய்வார்கள்.
மத்திய அமைச்சர்களுடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வுசெய்வார்.
பின்னர், மத்திய அமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைத் தலைமைச்செயலகத்தில் சந்தித்து மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வெள்ளச் சேதங்கள் பற்றி கேட்டறிய உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu