மிக்ஜம் புயல் சேதம்: ரூ.5,060 கோடி கேட்டு பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ( பைல் படம்)
‘மிக்ஜம்' புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்க் கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமர் அவர்களிடம் நேரில் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜம்' புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.
இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடியைகேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், 'மிக்ஜம்' புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu