58.99 அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் விவசாயிகள்
மேட்டூர் அணை - கோப்புப்படம்
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த ஜூன் 12 முதலமைச்சர் ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் அப்போது 103 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்தது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 850 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.
முதற்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பட்ட நிலையில் தொடர்ந்து 10 ஆயிரம், 15 ஆயிரம், 13 ஆயிரம் என தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால் தற்போது இருக்கும் நீர் இருப்பை கொண்டு குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும்போது கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதனால் முன்கூட்டியே மே 24-ல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது பருவமழையும் சரிவர பெய்யவில்லை. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரையும் முழுமையாக வழங்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 299 அடியாக மட்டுமே உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.99 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 23.93 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான ஆகஸ்ட் 1 கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்படவில்லை. இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கே முழுமையாக தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை இருக்கும்போது கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளதால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பருவமழை கைகொடுத்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu