பணி நீக்கத்தால் விரக்தி: குத்தாலம் பேரூராட்சி பெண் ஊழியர் தற்கொலை
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நதியா.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். வீடுகள்தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு தகவல் சொல்வது, வீடுகள் தோறும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்துத்தர அறிவுறுத்துவது போன்ற வேலைகள் இவர்களது பணிகளாகும்.
கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம், ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நான்கு பேரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டு, வேறு நபர்களுக்கு அந்த பணி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் அந்த பணியை தங்களுக்கே வழங்க வேண்டும் என, பெண்கள் நால்வரும் கோரி வந்தனர்.
இந்த நிலையில், வேலை போனதால் மனமுடைந்த நதியா, வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிருக்கு போராடிய அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை, நதியா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் சக பணியாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu