தமிழக ஆளுநர் பாஜக ஆளுநராக மாறிவிட்டார்: துரை வைகோ பேட்டி

தமிழக ஆளுநர் பாஜக ஆளுநராக மாறிவிட்டார்:  துரை வைகோ பேட்டி
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் துரை வைகோ 

தமிழக ஆளுநர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறியதால் தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது என துரை வைகோ கூறியுள்ளார்

மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமத்துவம், சமுதாய ஒற்றுமை இருக்கிறது. வடக்கே என்ன நடக்கிறது என்று மக்களுக்கும் தெரியும். மதவாத சக்திகள் தமிழகத்தில் ஊடுருவக்கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் என்று சொல்லக்கூடாது பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறினாரோ அன்றே அவர் தமிழக ஆளுநர் இல்லை என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால்தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது வன்முறை கூடாது. அறவழியில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவோம்.

மத்திய அரசு ஒதுக்கீடு 800 மெகாவாட் வராத காரணத்தாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கோடைகாலத்தில் மின்பயன்பாடு 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த தருணத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படுகிறது.

தமிழக அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். நிலக்கரி இறக்குமதி சம்பந்தமாக முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது. மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு. கோடைகாலங்களில் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என்பதை அறிந்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி விலை உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவிகிதம் நிலக்கரியை கொண்டுதான் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவந்து மத்திய பல்கலைக்கழக்கங்களுக்கு மட்டும் என்று கூறி ஏழை, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை பாதிக்கும். நீட் போன்று உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்யக்கோரி கண்டனம் தெரிவித்து வருகிறோம். பாஜகவின் மக்கள் விரோத பொய்பிரச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil