ஆசிரியர் தினம்: தருமபுரம் ஆதீனம் வாழ்த்துச் செய்தி
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
ஆசிரியர்களை மதித்து போற்றும் தன்மையை வளர்த்துக் கொண்டால் கல்விஞானம், கலைஞானம் பெற்று வாழ்வில் உயரலாம். மாணவர்களை மேலே ஏற்றிவிடும் ஏணியாக இருந்துவரும் ஆசிரியர்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தி: ஆசிரியர்களுடைய பணி மிக முக்கியமானது. ஆசிரியர்கள் தான் எல்லா நிலையிலும் உள்ளவர்கள். ஆகையால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கும் போற்றப்படுகிறது. வீட்டில் உள்ள தாய் கணவனை வணங்க வேண்டும். குழந்தை தாயையும், தந்தையையும் வணங்க வேண்டும். பின்னர், தாய், தந்தை, குழந்தை மூவரும் சேர்ந்து குருவை வணங்கவேண்டும். குருநாதர் இந்த மூவரையும் அழைத்துக் கொண்டு தானும் சென்று இறைவனை வணங்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஒரு பண்பாட்டினுடைய நிகழ்வாக அது அமையும்.
ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை மேலே ஏற்றி விடுகின்ற ஒரு ஏணியாக இருக்கிறார்கள். மழலையர் பள்ளியில் தொடங்கி மேல்நிலைக் கல்வி வரை நல்ல மாணவர்களை உருவாக்குவது என்பது அவர்களுடைய சிறந்த தன்மை. அதனால் தான் தாயாகவும், தந்தையாகவும், குருநாதராகவும் இருந்து மாணாக்கர்களை உலகிற்கு காட்டி வரும் பெருமை அவர்களுக்கு கிடைக்கிறது. மேலும், ஆசிரியர் தின விழா கொண்டாடுவது என்பது போற்றுதலுக்குரியது. இந்த ஆசிரியர் தின விழாவில் நாம் அனைவரும் ஆசிரியர்களை மதிப்போம், போற்றுவோம். அந்த தன்மை வந்தால் நமக்கு கல்விஞானம், கலைஞானம் உள்ளிட்ட அனைத்தும் பெற்று வாழ்வில் உயரலாம் என்று தனது வாழ்த்து செய்தியில் தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu