மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு; தீயணைப்பு வீரர்கள் மீட்பு
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பிடிபட்ட பாம்பு.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் கட்டிடத்தை சுற்றி பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக மரங்களுடன் கூடிய பூங்கா இருந்தது.
தற்போது இது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கொடிய விஷம் உள்ள பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அலுவலகத்தின் முன்புறமுள்ள பகுதியில் 5 அடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு ஒன்று மரத்தில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஊழியர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மரத்தின் மேல் இருந்த பாம்பை பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
புதர்மண்டிய பகுதிகளை சீரமைத்து பொதுமக்கள் அமரும் வகையில் சிமெண்ட் பெஞ்சுகள் உடன் கூடிய பூங்காவாக இதனை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu