மயிலாடுதுறை: கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் சேதம்
மயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் நில பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்து வருவது வாடிக்கையான நிகழ்வாகும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு ஒரு நாளைக்கு 800 சிப்பம் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டு 250 முதல் 500 சிப்பம் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால், பெரும்பாலான விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை திறந்த வெளியில் அடுக்கி வைத்து, விற்பனை செய்வதற்காக 10 நாட்களாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென பெய்த மழையால் மணல்மேடு, கடக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து, விவசாயிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன், நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu