திருவாலங்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் தங்க நகை, ரொக்கம் கொள்ளை
நகைகள் திருடுபோன வீடு.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62). இவர் திருவாவடுதுறை ஆதினத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தாயார் அருகில் உள்ள திருக்கோடிக்காவல் கிராமத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், ராஜேந்திரன் அவரை பார்ப்பதற்காக நேற்றிரவு தனது மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
இன்று அதிகாலை மீண்டும் தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் வாசல் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.
சோதனையில் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து, கிரில் கேட் பூட்டை உடைத்து, கதவை நெம்பி உடைத்து உள்ளே நுழைந்து வீட்டின் இரு அறைகளிலும் உள்ள பீரோவை மர்ம நபர்கள் உடைத்து இருப்பது தெரியவந்தது. பீரோவில் வைத்திருந்த ஆரம், டாலர், நெக்லஸ், செயின், பிரேஸ்லெட், மோதிரம், தோடு உள்ளிட்ட 34 பவுன் தங்க நகைகளும், 2 கிலோ வெள்ளி பொருள்களும், ரூ.3,000 ரொக்க பணம் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவை திருட்டு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து விசாரணை செய்யப்பட உள்ளது. ராஜேந்திரனின் ஒரே மகன் அருண் ராஜ் அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu