விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் மெத்தனம்: ஓ.எஸ்.மணியன் குற்றசாட்டு
பேட்டி: ஓ.எஸ்.மணியன் (முன்னாள் அமைச்சர்)
விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றசாட்டினார்.
மயிலாடுதுறை ஒன்றியம், செருதியூர் ஊராட்சி, முளப்பாக்கம் கிராமம் ஐயனார் கோயில் களத்தில் கடந்த 7 ஆண்டுகளாக திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. நிரந்தர கட்டடம் இல்லாததால் நிகழாண்டு குறுவை பருவத்துக்கு இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால், அப்பகுதி விவசாயிகள் இணைந்து அந்த களத்தில் மேற்கூரை அமைத்து, 5000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த, அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் ஆகியோர்அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை முறையிட்டனர்.
பின்னர், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் 118 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. தற்போது 82 கொள்முதல் நிலையங்களை மட்டுமே திறந்துள்ளனர். எஞ்சிய கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட வேண்டும். விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை வயல்களிலும், களத்திலும் வைத்துக்கொண்டு காத்திருக்கின்றனர். அவற்றை கொள்முதல் செய்வதில் அரசு சுணக்கம் காட்டுகிறது.
ஆனால், தேக்கமின்றி நெல் கொள்முதல் செய்யப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கூறுகிறார். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே, விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்த நெல்லை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் எதற்காக காலதாமதம் ஏற்படுகிறது என்பது குறித்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிச்சயம் கேள்வி எழுப்புவேன். சம்பா பருவத்துக்கான காப்பீடு திட்டம் இன்னமும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால், உணவுத்துறை அமைச்சர் காப்பீட்டு பிரிமியத் தொகை செலுத்தாமலேயே காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று கூறுகிறார். நஷ்டஈடு என்பது வேறு, காப்பீட்டுத் தொகை என்பது வேறு. அதிமுக அரசு வெள்ள நிவாரணம், காப்பீட்டுத்தொகை இரண்டையும் வழங்கியது. விவசாயிகளை வேதனைப்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu