வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி நாடகக் கலைஞர்கள் கோரிக்கை
தடைவிதிக்கப்பட்டகோயில் திருவிழாக்களை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடத்தி நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி நாடகக் கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் விநாயகர், காளி, ராமர், அரிச்சந்திரன், விஸ்வாமித்திரர் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் பூண்டு கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து பேரணியாகச் சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதில், கோயில் விழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ள நாடக கலைஞர்கள் கோயில் விழாக்களை நடத்துவதற்கு விலக்கு அளிக்கக் கோரி 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரணியாக வந்து மனு அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்றால் வேலை இன்றி பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த ஆண்டு மீண்டும் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும். சித்திரை மாதம் துவங்க உள்ள நிலையில் பல்வேறு நாடக கலை நிகழ்ச்சிகளுக்கு முன் பணம் பெற்று வருகின்ற சித்திரை மாதத்தில் நாடகம் நடத்துவதற்கு தயாரான நிலையில் தமிழக அரசு தடை விதித்துள்ளது தங்கள் வாழ்வாதாரத்தை கீழே கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், உடனடியாக தமிழக அரசு நாடக கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு 50 சதவீதம் விலக்கு அளித்து திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலில் விழுந்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். முன்னதாக மயிலாடுதுறை வரதாச்சாரியார் பூங்காவில் இருந்து பேரணியாக விநாயகர், நாரதர், ராமர், கருப்பசாமி, பச்சைக்காளி, பவளக்காளி, அரிச்சந்திரன், சந்திரமதி, விஸ்வாமித்திரர், பபூன் போன்ற பல்வேறு வேடங்களைப் பூண்டு கைகளில் திருவோடு ஏந்தி வழியெங்கும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்தவாறு கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று, கூடுதல் ஆட்சியர் வாசுதேவனிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu