விளைச்சல் பாதிப்பால் பொங்கல் மஞ்சளுக்கு மவுசு: விவசாயிகள் நம்பிக்கை
மஞ்சள் அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயி.
ஏழைகளின் குங்குமப்பூ என்று அழைக்கப்படுவது, மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள். சூரிய வெளிச்சம் மற்றும் நெருப்பின் தனலால் நிறம் மாறினாலும் மருத்துவ குணம் மாறாத மஞ்சளை நம் முன்னோர் ஆன்மீகத்தில் ஆரோக்கியத்தை புகுத்தும் விதமாக பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் மஞ்சள் கொத்தினை கட்டி அடுப்பில் ஏற்றுவார்கள்.
அதுமட்டுமின்றி அந்த மஞ்சளை பத்திரப்படுத்தி மறுநாள் காலையில் மஞ்சள் கீறுதல் என்னும் சடங்காக செய்வதுடன், வீட்டில் உள்ள அனைவரும் சீரும், சிறப்புமாக வாழவேண்டும் என வாழ்த்தி பெரியவர்கள் வீட்டில் உள்ளவர்களின் நெற்றியில் இட்டு ஆசிர்வதிப்பார்கள். ஒரே செடியில் கொத்தாக அமைந்திருக்கும் மஞ்சள் கொத்து, குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்துவதாக உள்ளதால் உறவினர் அனைவரும் ஒன்று சேரும் பொங்கல் திருநாளில் மஞ்சள் கொத்துக்கு நிச்சயம் இடம் உண்டு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சேண்டிருப்பு, காளி, கஞ்சாநகரம், மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள்கொத்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 8 மாத பயிரான மஞ்சளுக்கு, பராமரிப்பு என்பது பெரிய அளவில் கிடையாது என்பதால் விவசாயிகள் வாழை, தோட்டப்பயிர்களுக்கு இடையில், இதனை ஊடுபயிராக சாகுபடி செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், தற்போது மஞ்சள் கொத்தினை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதங்களில் பெய்த கனமழையால், மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சிய மஞ்சள் கொத்துக்கு, சந்தையில் தேவை அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இம்முறை மஞ்சளுக்கு மவுசு இருக்குமா என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu