மயிலாடுதுறை அருகே குளத்தில் முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்
முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வரதம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஓமக்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக முதலை ஒன்று தென்படுவதாகவும், அடிக்கடி குளக்கரையில் ஏறிவந்து இளைப்பாறுவதை ஊர் பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக வருவாய்த்துறை மற்றும் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன் நிகழ்விடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டார்.
சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் உத்தரவுப்படி வனவர் கதாநாயகன் தலைமையில், வனத்துறையினர் ஓமக்குளத்திற்கு வந்து முதலையை பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று இடங்களில் பள்ளம் தோண்டி, கோழி இறைச்சியை வைத்தும், கரைகளில் கோழி இறைச்சிகளை போட்டும் முதலையை பிடிப்பதற்கு பொறி வைத்து உள்ளனர். ராஜன் வாய்க்கால் வழியாக முதலை குளத்திற்கு வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குளத்தில் இறங்கி பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் வருவாய்த்துறையினர் தடை விதித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu