ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதைக் கண்டித்து குடும்பத்துடன் தர்ணா
ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துவிட்டதைக் கண்டித்து சீர்காழி தாலுகா அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கீழமூவர்க்கரை கிராம மக்கள்.
சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து, அந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன். இவருடன் பிறந்த கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா ஆகிய 5 சகோதரர்கள் உள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வெண்கலத்தில் ஆன படிக்கட்டு அமைத்து, அதில் நிலவன் உபயம் என தனது பெயரை பொறித்துள்ளார் .இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியபிரமுகர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், பெயர் பொறித்து வைக்கக் கூடாது என கூறியுள்ளனர். இப்பிரச்னை காரணமாக நிலவன் , கர்ணன், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும், இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக்கூடாது. இதனை மீறினால், ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கீழமூவர்க்கரையில் உள்ள கடைக்காரர்கள் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்னர் நடந்த கோயில் திருவிழாவில், ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைப் படித்து, இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என அறிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்குள்ளான ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டாட்சியரிடம் மனு அளித்த பின்னர், அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள ஊரார்கள் தங்களை அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ல்வதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu