மயிலாடுதுறை அருகே மணல் கடத்தியதாக அதிமுக பிரமுகர் லாரி, ஜேசிபி சிறை பிடிப்பு : காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் மணல் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
மயிலாடுதுறை அருகே ஆற்றில் மணல் கடத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளரின் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாடகச்சேரி கிராமம் நண்டலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவீரன் வன்னியர் சங்கம் தலைவர் வி.ஜி.கே.மணி தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்றபோது ஆற்று ஓரம் கொட்டப்பட்டிருந்த ஆற்றுமணல் ஜேசிபி இயந்திரம் மூலம் அள்ளப்பட்டு வருவது தெரியவந்தது.
உடனடியாக மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை கிராம மக்கள் பறிமுதல் செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாகனங்கள் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜூக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து செய்தியாளரிடம் மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.கே மணி கூறுகையில், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து லாரியில் மணல் ஏற்றி அரசு ஒப்பந்த வேலைகள் செய்து வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது பொதுமக்கள் லாரிகளையும் ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்து உள்ளோம். இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu