தரங்கம்பாடியில் மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் கைது
கைது செய்யப்பட்ட தனி தாசில்தார் பாலமுருககன்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 61) என்பவரின் மனைவி தையல்நாயகி. இவருக்கு மாற்றுத்திறனாளி சான்று, உதவித்தொகை கோரி தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பாலமுருகனிடம் விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் ரூ.2,000 லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் மனு கொடுத்தார்.
புகாரை பெற்று கொண்ட நாகை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சித்திரவேலு தலைமையில் லஞ்சம் ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்மொழி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு மாறுவேடத்தில் வந்தனர்.
அப்போது ராமச்சந்திரனிடம் போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ. 2 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி ரகசியமாக கண்காணித்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட தனி தாசில்தார் பாலமுருகனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu