சுருக்கு மடி வலைக்கு அனுமதி கோரி சீர்காழி அருகே 5000 மீனவர்கள் உண்ணாவிரதம்
சீர்காழி அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள்.
சீர்காழி அருகே சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்ககோரி, 21 கிராமங்களை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்தந்த கிராமங்களில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுருக்குவலையை பயன்படுத்தி தொழில் செய்ய அனுமதி அளிக்க வேண்டும், 1983 மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தை அமுல்படுத்தி, 21 வகையான தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழிலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 6-ஆம் தேதி பூம்புகாரை தலைமை மீனவ கிராமமாக கொண்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், சுருக்கு வலை தொழிலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் உள்ள அனைத்து வகையான விதிமுறைகளையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 17-ஆம் தேதி (இன்று) மயிலாடுதுறை மாவட்டத்தில் அந்தந்த மீனவ கிராமங்களில் காலை 9 மணி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி, சுருக்கு மடி மீனவர்களையும் கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என இன்று முதல் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சீர்காழி அருகே உள்ள பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட 21 மீனவ கிராம மீனவர்கள் அந்தந்த கிராமங்களிலேயே அமர்ந்து இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்களது போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவ குடும்பத்தினர் நாளை தங்களது குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போவதாகவும் அறிவித்துள்ளனர்.
மேலும், மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மீனவர்கள் அல்லாத கிராமத்தினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். திருமுல்லை வாசல், பூம்புகார் பகுதியில் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu