பல்கலை., முன்பு தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்த மாணவியால் பரபரப்பு

பல்கலை., முன்பு தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்த மாணவியால் பரபரப்பு
X

பைல் படம்.

தமிழ் வழிக் கல்விக்கான சான்றிதழ் கேட்டு வந்த மாணவியை, பல்கலை., அலுவலர்கள் அலைக்கழிப்பு செய்ததால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவி மிரட்டல்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிகாம் பட்டப் படிப்பை முடித்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கலைவாணி, தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வு துறை நடத்தும் குரூப் தேர்வில் பங்கேற்க முடிவு செய்தார். அண்மையில், தமிழக அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து, கலைவாணி தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் சான்றிதழ் உடனடியாக வழங்க முடியாது எனவும், அதற்கு பத்து நாட்களாகும் என தெரிவித்துள்ளனர். சான்றிதழ் இருந்தால் மட்டுமே தேர்வில் பங்கு பெற முடியும் என்பதால் ஓரிரு நாட்கள் மட்டுமே தேர்வுக்காக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் உள்ளது.

இதனால், மாணவி தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தனக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்கும்படி கேட்டுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து, மாணவியை அலைக்கழிப்பு செய்ததால், நேற்று மாலை மாணவி கலைவாணி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சென்று தனக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் இல்லை என்றால், இங்கேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாகவும் நான் இறந்த பிறகாவது மற்றவர்களுக்கு சான்றிதழ் உடனடியாக வழங்குவீர்கள் என தெரிவித்து தான் கையில் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்துள்ளார். அதனால், பதறிய அதிகாரிகள் மாணவி செயலை தடுத்து நிறுத்தி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. மாணவி கலைவாணிக்கு, நாளை சான்றிதழ் வழங்குகிறோம் என உறுதி அளித்ததன் பேரில் ,மாணவி தனது தற்கொலை முடிவை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் வழங்க காலதாமதம் செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, மாணவி தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!