மதுரை மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்..!

மதுரை மருத்துவக் கல்லூரியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்..!
X

மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய மருத்துவ உபகரணங்களை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

மதுரை மருத்துவக்கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார்.:

மதுரை:

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் ரூ.412.15 கோடி செலவில் 12 மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று (22.10.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கேத்லேப் கருவி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் வழங்கிய ரூ.7.99 கோடி சமூக பொறுப்பு நிதியின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் 24 மணிநேரமும் 20 நெஞ்சுவலி நோயாளிகளுக்கு Coronary Angiography (CAG) மற்றும் Percutaneous Transluminal Coronary Angioplasty (PTCA) சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் CAG சிகிச்சைக்கு ரூ.15,000 மற்றும் PTCA சிகிச்சைக்கு ரூ.2 இலட்சம் வரை கட்டணம் வாங்கப்படுகிறது. ஆனால், இந்த மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், ரூ.64.94 இலட்சம் மதிப்பீட்டில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில், அதிநவீன ஒருங்கிணைந்த நுரையீரல் ஆராய்ச்சி கூடம் (Advanced Integerated Respiratory Research Laboratoty), இம்பல்ஸ் ஆசிலோமெட்ரி (Impulse Oscillometry), நுரையீரல் அளவு மற்றும் திறன் பரிசோதிக்கும் கருவி (Diffusing Capacity of the Lungs for Carbon Monoxide (DLCO), இருதயம் மற்றும் நுரையீரல் செயல் திறன் பரிசோதிக்கும் கருவி (Cardiopulmonary exercise testing) உள்ளிட்டவை எளிய முறையில் சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அவசர ஊர்தி, மதுரை கோடக் மகேந்திரா வங்கி வழங்கிய ரூ.21.95 இலட்சம் சமூக பொறுப்பு நிதியின் மூலம் வாங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சப்பாத்தி மிஷின் நிறுவப்பட்டுள்ளது. அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளுக்கு இரவு நேர உணவாக சப்பாத்தி வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக விரைவாக சமையல் செய்வதற்காக புதியதாக சப்பாத்தி தயாரிக்கும் கருவி இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இக்கருவியின் மூலம் ஒரு நாளைக்கு 1,000 சப்பாத்திகள் வரை தயாரிக்கப்பட்டு உள்நோயாளிகளுக்கு வழங்க இயலும்.

உசிலம்பட்டி அரசு மாவட்டத்தலைமை மருத்துவமனையில் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை இராசாசி மருத்துவமனையில்,இந்தாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஏற்கனவே உள்ள கேத்லேப் கருவிகளின் மூலம் 3,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இம்பல்ஸ் ஆசிலோமெட்ரி கருவி என்பது மூச்சுக்குழாய் நோய்களை எளிதில் கண்டறிய கூடிய அதிநவீன கருவியாகும். ஒலி அலைகளை பயன்படுத்தி சுவாச மூச்சிகுழாயின் சுருக்கங்களை கண்டறியும் இந்த கருவியின் மூலம் குழந்தைகள் முதல் முதியவர் வரை சுலபமாக பயன்படுத்த முடியும்.

இக்கருவி தென் தமிழகத்தில் உள்ள எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் பயன்பாட்டில் இல்லை. தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை அளிக்கப்படும்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கடந்த 4 ஆண்டுகளில் திறந்து வைக்கப்பட்ட கட்டிடங்கள் மொத்தம் ரூ.412.15 கோடி செலவில் 12 மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.313.25 கோடி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி (JICA) – 6 தளங்கள் கொண்ட டவர் பிளாக் கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ரூ.2.89 கோடி - நெஞ்சக மருத்துவ பிரிவு கட்டிடம்,

ரூ.10 கோடியில் மதுரை, தோப்பூர் அரசு நெஞ்சக மருத்துவமனையில், தொற்று நோய்க்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை கட்டிடம், ரூ.65 இலட்சம் - சீமாங் கட்டிட தரைத்தளத்தில் பார்வையாளர்கள் அமரும் இடம், ரூ.1.03 கோடி - கட்டண படுக்கை தொகுதிகள், விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, ரூ.41.25 கோடி மதிப்பீட்டில் கல்வியியல் கூடம், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் குடியிருப்பு கட்டிடம்,

ரூ.8.60 கோடி மதிப்பீட்டில் மாணவர் விடுதி, ரூ.9.39 கோடி மதிப்பீட்டில் மாணவியர் விடுதி, ரூ.8.62 கோடி மதிப்பீட்டில் நூலக கட்டிடம், ரூ.12.27 கோடி மதிப்பீட்டில் கூடுதல் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர்கள் விடுதி, ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் விலங்குகள் கூடம், ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கம் சீரமைப்பு என பல்வேறு பணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேபோல, ரூ.20 கோடி செலவில் தரை மற்றும் 2 தளங்களுடன் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடம் (மதுரை வடக்கு) கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3.60 கோடி செலவில், கூடுதல் வார்டு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டிடம் (மதுரை தெற்கு) கட்டிடப்பணிகள் என, மதுரை மாவட்டம் முழுவதும் ரூ.67.11 கோடி செலவில் 37 புதிய மருத்துவ கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழக முதலமைச்சர், அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில்,மதுரை மாவட்டத்தில் மட்டும் 64 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்டமாக (மதுரை மாநகராட்சிக்குட்பட்டு 45, திருமங்கலம் நகராட்சியில் 1 என 46 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் வலுவான மருத்துவ கட்டமைப்பு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இதனை மேலும், வலுப்படுத்தும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,தொடர்ந்து மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு,முக்கியத்துவம் வழங்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) அவர்கள், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.அருள் சுந்தரேஸ்குமார் , மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குநர் ஆர்.செல்வராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story