மதுரை அருகே ஆட்கள் பற்றாக்குறையால், இயந்திரம் மூலம் நடவுப் பணிகள்

இயந்திரம் மூலம் நெல் நாத்து நாடும் விவசாயி.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்ரமங்கலம் பகுதியில் முதல் முறையாக இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகளை துவங்கிய விவசாயிகள் வங்கி கடன் மூலம் இயந்திரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் மற்றும் முதலைக்குளம் ஊராட்சி பகுதிகளில், தற்போது நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சில பகுதிகள் திருமங்கலம் கால்வாய் பாசனத்திலும், சில பகுதிகளில் கண்மாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும், நடவு பணிக்குரிய ஆள் பற்றாக்குறையால் பல்வேறு கிராமங்களில் உரிய நேரத்தில் நடவு பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். மதுரை மாவட்டத்தில் இயந்திரம் மூலம் நடவு பணிகள் பல பகுதிகளில் நடந்தாலும், விக்கிரமங்கலம் பகுதியில் இதுவரை ஆட்கள் மூலம் நடவு பணிகள் நடந்து வந்தது .
முதல் முறையாக விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டியில், பால்பாண்டி எனும் விவசாயி தனது தோட்டத்தில் பவர் டில்லர் வடிவிலான இயந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டார். இதுகுறித்து, பால்பாண்டி கூறுகையில்:
வழக்கமான நடவு பணிகளுக்கு நாற்றங்கால் முதல் நடவு பணிகள் வரை ஒரு ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் அளவில் செலவாகும். இயந்திர நடவுக்கு சுமார் பத்தாயிரம் ரூபாயில் முடிந்துவிடுகிறது. பணத்தை விட பணிகளுக்கு ஆள் கிடைப்பது அரிதாகிவிட்டது. நாகரீக உலகில் பலர் இலகுவான பணிக்கு செல்வதால், விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை ஆகிவிட்டது. மண்ணோடு மனிதன் இணைந்து செய்த விவசாயம் தற்போது ,இயந்திரம் மூலம் நடக்கிறது. தற்போது ஆள் பற்றாக்குறை மற்றும் குறைவான நேரத்தில் பணிகள் முடிவடையும். ஆகையால், இயந்திர நடவுக்கு மாறிவிட்டேன் என்று கூறுகிறார். இதற்குரிய நடவு இயந்திரங்கள் எங்கள் பகுதியில் யாரிடமும் இல்லாத நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைத்து, வாடகைக்கு பணிகளை மேற்கொள்கிறோம்.
எனவே ,தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் நடவு இயந்திரத்தை இப்பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையிலும், வங்கி கடன் உதவி மூலம் வழங்கினாள், இங்குள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆள் பற்றாக்குறை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை இயந்திர வரவழைப்பது மூலம் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதுடன் நவீன விவசாயத்தை ஊக்கப்படுத்த வேளாண்மைத் துறையினர் உதவ வேண்டுகிறேன் என்று கூறுகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu