விக்கிரமங்கலம் பகுதியில், நெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் அவதி

விக்கிரமங்கலம் பகுதியில், நெல் கொள்முதல் தாமதம்: விவசாயிகள் அவதி
X

குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள்

மதுரை அருகே நெல் கொள்முதல் செய்ய தாமதம் செய்வதால், வீணாகும் நெல்மணிகள். விரைவில் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே, கல்புளிச்சான் பட்டி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், உள்ள நெல் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாமல் உள்ளதால், மழையில் நனைந்து வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .

அரசு உத்தரவிட்டும், அதிகாரிகளின் மெத்தன போக்கால் கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் ,நெல் குவியல்களை பராமரிக்க தினந்தோறும் 10,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்வதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக அறுவடை செய்த நெல், மழையில் நனைந்து வீணாவதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், நெல் அறுவடை செய்து 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்து போயுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 100 மூடை அளவுள்ள கொள்முதல் நிலையத்தில் 1,000 மூட்டைகளுக்கு மேல் உள்ளதால், அருகில் உள்ள வயல்களில் நெல்களை கொட்டி உள்ளனர்.

விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வம் கூறும்போது, நெல் கொள்முதல் செய்யவில்லை என்று கிராம பொதுமக்கள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு என்னிடம் வந்து தெரிவித்தவுடன் அதிகாரியைத் தொடர்பு கொண்டு கூறினேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சிக்காரர்களின் தூண்டுதலால், அதிகாரிகள் வர மறுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றார்கள்.

மேலும், வயல்களில் உள்ள நெல்லை கொள்முதல் செய்து குடோனுக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு பத்து நாட்களுக்கு பின்பு மறுபடியும் கொள்முதல் நிலையத்தில் வந்து அதிகாரிகள் கொட்டி விட்டுச் சென்றனர். ஆகையால், மழையில் நனைந்து நெல்கள் முளைத்து போயுள்ளது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக புகார் தெரிவிக்கின்றார். எனவே, அரசு கவனம் செலுத்தி விவசாயிகள் பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர், செல்லம்பட்டி யூனியன் தலைவர் ஆகியோரிடம் சென்று முறையிட்டும் , சொல்வதை கேட்க மறுப்பதாகவும், இதனால் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கி கிடைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!