மதுரை அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு..!
தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்
மதுரை அருகே கருமாத்தூர் அருகே,செட்டிகுளம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை அகற்ற வேண்டும் ஆட்சியர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, தேர்தலை புறக்கணிப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு :
சோழவந்தான்:
தமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக சுவரொட்டி ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது செட்டிகுளம் கிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பெரும்பாலும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். கண்மாய்களில் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றது. இந்த தடுப்பணையால், கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து தடைபட்டது. இதனால், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, ஊர் கிராம பொதுமக்கள் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அதில், நீர்வளத்துறை, பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம், குப்பணம்பட்டி பாசனப்பிரிவு 1-க்கு கட்டுப்பட்ட வரத்து வாய்க்காலில் கட்டப்பட்ட ஐந்து தடுப்பணைகளை அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காத நீர்வளத்துறை, பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட அதிகாரிகள் மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்தும் ,
உடனடியாக தடுப்பணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் விதமாக, கிராம மக்கள் கூடி எடுத்த முடிவின்படி வரும் 19ம் தேதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம பொதுமக்கள் சார்பில், போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேட்பாளர்கள் கிராமம் கிராமமாக வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில், வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியின் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தேசிய கட்சி தலைவர்கள் பலரும் வந்து வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வரும் நிலையில், தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu