சோழவந்தான் அருகே புதிதாக கட்டப் பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறக்கப்படுமா
புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், சில ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அங்கன்வாடி மையம் கட்டி 5 வருடங்களாக திறக்கப்படாததால், சமுதாயக்கூடத்தில் குழந்தைகள் படிக்கும் அவலம் நிலை நீடிக்கிறது. அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில்,கடந்த 2017 -18 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 8.50 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகியும் அங்கன்வாடி மையம் திறக்கப்படாததால், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் சமுதாயக்கூடத்தில் பயின்று வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கியுள்ளது .
அங்கன்வாடி மையம் பயன்பாட்டிற்கு வராமலேயே, கடந்த 2022.23 -ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையம் பராமரிப்பு செய்தல் என்ற பெயரில் 1.75 லட்சம் மதிப்பில் மராமத்து பணியும் செய்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .
மேலும், பேவர் பிளாக் அமைத்தல் என்ற பெயரில் 4.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி முன்பு பேவர் பிளாக் அமைத்து சாலையும் அமைத்துள்ள ஊரக வளர்ச்சித் துறையினர் அங்கன்வாடி மையத்தை திறப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குழந்தைகள் தற்போது சமுதாய கூடத்தில் உள்ளனர் .
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்: அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நிலையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் குழந்தைகள் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அங்கன்வாடி மையத்தை திறக்க அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பிலும் ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், குழந்தைகளை சமுதாய கூடத்தில் தொடர்ந்து தங்க வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகையால், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் தலையிட்டு, அங்கன்வாடி மையத்தை துரிதமாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu