ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி குறித்து மாவட்ட ஆட்சியர்

ஆடி அமாவாசை: சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி குறித்து மாவட்ட  ஆட்சியர்
X
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா.
ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சாப்டூர் கிராமம் சதுரகிரிமலை அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்மா.சௌ.சங்கீதா ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் சாப்டூர் கிராமம் சதுரகிரிமலை அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16.08.2023-அன்று நடைபெறவுள்ளது. பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 12.08.2023 முதல் 17.08.2023 வரை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக் கப்பட்டுள்ளார்கள். மேற்கண்ட தினங்களில் அதிகாலை 5.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் படுவார்கள். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்கும்பொருட்டு பக்தர்கள் 12.08.2023 முதல் 17.08.2023 வரை பரவலாக வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் மலைமீது தங்குவதற்கு அனுமதியில்லை.

பக்தர்களின் நலனுக்காக போக்குவரத்துத் துறையினரால், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, டி.கல்லுப்பட்டி மற்றும் மதுரை ஆகிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருக்கோவில் வளாகத்தில் ஜெனரேட்டர் மூலம் தேவையான அளவு மின்விளக்குகள் மற்றும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் வெள்ளைப்பாறை வழியாக அருள்மிகு சுந்தரமூர்த்தி சன்னதி சென்று அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, சன்னதிக்கு எதிரே உள்ள புதிய பாதை வழியாக வெளியே வந்து அருள்மிகு சந்தன மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, இரும்பு பாலத்தின் வலதுபுறமாக கீழே இறங்குமாறு ஒருவழிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிதண்ணீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகள் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள், குடிநீரை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். தனியார் வாகனங்களில் வரும் பொதுமக்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்திச் செல்ல வேண்டும். பொதுமக்களின் வசதிக்காக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியே கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மலையடிவாரம் மலைக்குச் செல்லும் மலைப்பாதை மற்றும் திருக்கோவில் வளாகம் ஆகியவற்றில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை வனப்பகுதிக்குள் விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வயதான மற்றும் கடுமையான நோய் உள்ளவர்கள் மலை மீது ஏறுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தரும் பக்தர்கள் கோவிலில் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!