மதுரை அருகே கஞ்சா போதையில் தனியார் பஸ் ஊழியரிடம் தகராறு செய்த 5 பேர் கைது
மதுரை அருகே உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் தனியார் பேருந்தை வழிமறித்து நடத்துனரை தாக்கிய விவகாரத்தில், 5 இளைஞர்களை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகர் பகுதியான மதுரை ரோடு விநாயகர் கோவில் அருகில், தனியார் பேருந்தை வழிமறித்து ஆட்டோவில் வந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் நடத்துநரை சரமாறியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது,
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அபே ஆட்டோவில் வந்து தாக்குதல் நடத்தி இளைஞர்களை தேடி வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக, கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த சூர்யா, அனிஷ், தினேஷ், உதயக்குமார், முத்தையா என்ற 5 இளைஞர்களை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அன்றைய தினம் பூச்சிபட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த நண்பரின் துக்க நிகழ்விற்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது தனியார் பேருந்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும், உசிலம்பட்டி நகர் பகுதிக்கு வந்து வழிமறித்துடன் தட்டிக் கேட்ட நடத்துநரை தாக்கியதாக கூறியுள்ளனர்.
மேலும், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கும் காவல் துறை, கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர்களை கண்டறிந்து உளவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி அவர்களை நல்வழிப் படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu