கஞ்சா தரமறுத்த முதியவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர் கைது
கைது செய்யப்பட்ட குருசாமி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்குத் தெரு பகுதியில் குண்டாறு கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் கனி (வயது58 ).இவர் திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு டீக்கடையில் வடை மாஸ்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
திருமங்கலம் நகர் போலீஸ் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று சிக்கந்தர் கனி சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிக்கந்தர் கனி முன்பு கஞ்சா வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது .மேலும் காவல் நிலையத்தில் கஞ்சா தொழில் செய்வதை விட்டு விடுவதாக கூறி கடந்த இரண்டு ஆண்டுகளாக வடை மாஸ்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் துணை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீஸ் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர் .
அப்பொழுது திருமங்கலம் நகர் பகுதியில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கொலையாளி சைக்கிளில் சென்று வந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து புகைப்படத்தை வைத்து தீவிரமாக தனிப்படை போலீசார் தேடிய நிலையில் கொலையாளி தேனி பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி குருசாமி என்பது தெரியவந்தது.
விருதுநகர் பழைய நீதிமன்றம் பகுதியில் குடியிருந்து வரும் குருசாமி வயது 40 இவர் சிக்கந்தர் கனியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மேலும் இருவருக்கும் கஞ்சா பழக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே ஒரே பகுதியில் இருவரும் வேலை செய்துள்ளனர்.
இந்நிலையில் திருமங்கலம் நகரில் கஞ்சா வாங்கி இருவரும் அடித்துள்ளனர். அப்பொழுது முதியவர் சிக்கந்தர் கனியிடம் குருசாமி 2 துண்டு கஞ்சா கேட்டுள்ளார். இதை தர மறுத்துள்ளார் . முதியவர் சிக்கந்தர்க்கும் குருசாமி இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கோபமடைந்த குருசாமி கஞ்சா தராத ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து குருசாமியை கைது செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu