லாரியில் பேட்டரி திருட்டு: புகாரை பெற 10 நாளாக அலைக்கழித்த போலீசார்
திருடு போன லாரியில் எஞ்சியுள்ள பேட்டரி லோடு.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் நந்தகோபால், கடந்த நவம்பர் 1ஆம் தேதியன்று கோயம்பத்தூரில் இருந்து, பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி சென்றுள்ளார். மதுரை, செக்காணூரணியை அடுத்து லாரியை நிறுத்தி தார்பாயை சரிசெய்வதற்காக பார்த்தபோது, அதில் இருந்து 2 லட்சத்தி 50 ஆயிரம் மதிப்பிலான 66 பேட்டரிகளை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, செக்காணூரணி காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். திருமங்கலம் காவல்நிலையத்திற்கு சென்றபோது, சோழவந்தான் காவல்நிலையத்திற்கு செல்லுமாறு கூறியதைடுத்து, லாரியை உரிய இடத்திற்கு கொண்டு சேர்க்க முடியாத சூழலில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கடந்த 3ஆம் தேதி நேரில் புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து விசாரணை நடத்த, திருமங்கலம் டிஎஸ்பிக்கு மாவட்ட எஸ்பி பரிந்துரைத்துள்ளார். எனினும், ஓட்டுனர் நந்தகோபாலை, திருமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் மற்றும் திருமங்கலம் நகர் காவல்நிலையத்திற்கு அலைய விட்டதாக கூறப்படுகிறது. திருட்டு சம்பவம் தங்கள் எல்கையில் நடக்கவில்லை என காரணம் காட்டி மீண்டும் எஸ்பியிடமே புகார் கொடு என கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, நந்தகோபால் னேற்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக லாரியுடன் வந்து, எங்கு செல்வது என தெரியாமல் அமர்ந்துள்ளார் .
கடந்த 1ஆம் தேதி திருடுபோன நிலையில், உரிய இடத்தில் பொருட்களை சேர்க்க முடியாமல் 10நாட்களாக மதுரையிலயே தங்கி உணவின்றி தவித்து வருவதாகவும், காவல்துறையினர் வழக்குபதிவு செய்தால் மட்டுமே தன்னால் ஊருக்கு திரும்ப முடியும் நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
காவல்துறையினர் உரிய முறையில் புகார் எடுக்காத நிலையில், லாரி ஓட்டுனர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன், இது குறித்து விசாரணை நடத்த மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu