மதுரையில் 11 நாள்கள் நடைபெற்ற வில்லிபாரத தொடர் சொற்பொழிவு

மதுரையில் வில்லிபாரதம் சொற்பொழிவாற்றிய திருச்சி கல்யாணராமன்
புகழுக்காக எந்தச் செயலையும் செய்யக் கூடாது என்றார் திருச்சி கல்யாணராமன்
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் எஸ்.எஸ். காலனி., எஸ்.எம்.கே., திருமண மண்டபத்தில், திருச்சி கல்யாணராமனின் வில்லிபாரத தொடர் சொற்பொழிவு கடந்த 11 நாட்களாக நடந்தது.
நிறைவு நாளான இன்று 'கர்ணன் மோட்சம்', 'தர்மர் பட்டாபிஷேகம்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது; மக்கள் எல்லோரும் கருமித்தனத்தை கைவிட வேண்டும். பணம் கொடுப்பவன் மட்டும் வள்ளல் அல்ல. யார் யாருக்கு எப்பொழுது என்னென்ன தேவையோ, அதைப் பூர்த்தி செய்பவன்தான் வள்ளல். அந்தந்த காலங்களுக்கு ஏற்ப தர்மங்களைச் செய்ய வேண்டும் என பகவான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார்.
கிருஷ்ணனுக்கு புண்ணியம் தேவைப்பட, அதைக் கொடுத்தான் கர்ணன். அதுபோல நாமும் பிறருக்கு தேவையானதை தயக்கமின்றி தானம் செய்ய வேண்டும். தனம் சம்பாதித்தால் தான், தானம் செய்ய முடியும். மனிதர்களின் உண்மையான தனம் (சொத்து) அவனது மனம்தான். இதைச் செய்வதற்கு மனைவியின் துணையும் வேண்டும். இது எல்லாமே கர்ணனிடம் இருந்தது. அதனால் தான், கண்ணபெருமான் தன் கண்ணீராலேயே அபிஷேகம் செய்து அவனுக்கு மோட்சத்தை கொடுத்தார். 105 பேரிலும் பகவான், கர்ணனை விரும்பியதற்குக் காரணம் கொடைதான். அதனால் நாமும் கர்ணனை போல் கொடையாளியாக வாழ முற்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் தினமும் காலை எழுந்தவுடன் இறைவன் பெயரைச் சொல்லி எழுந்திருக்க வேண்டும். எதிலும் ஈடுபாடு இருக்க வேண்டும் என்கிறார் சுவாமி சிவானந்தர். நாம் பிறவிப் பெருங்கடலை நீந்தி கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையில், எந்தச் செயலையும் பெயருக்காகவோ புகழுக்காகவோ செய்யக்கூடாது. எல்லாவற்றிலும் பக்தி இருக்க வேண்டும் என்று திருச்சி கல்யாணராமன் பேசினார். நிகழ்ச்சியை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu