உக்ரைனில் விரைவில் தண்ணீர், மின்சாரம் 'கட்'; சீக்கிரம் காப்பாத்துங்க- மதுரை மாணவி
ரேச்சல்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வில்லாபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேச்சல். இவர் உக்ரைனில் உள்ள கராசின் கார்கிவ் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முதல் நாள் முன்பாக விமான டிக்கெட் புக் செய்ததால் மதுரை வந்துள்ளார்.
இவர் கூறுகையில், நான் அங்கு இருந்தவரை எந்த ஒரு போர் பதற்றமான சூழ்நிலை நிலவவில்லை. ஆங்காங்கே பீரங்கிகள் மற்றும் உக்ரைன் ராணுவ வீரர்கள் இருப்பதை மட்டுமே காணமுடிந்தது.
இருந்தாலும் பாதுகாப்பு கருதி எனது அம்மா இருபத்தி மூன்றாம் தேதி விமான டிக்கெட் புக் செய்த காரணத்தால் நான் உக்ரேனில் இருந்து மதுரை புறப்பட்டேன்.
நான் துபாய் வந்து கொண்டிருந்த போது அங்கு போர் தொடங்கிவிட்டது. இந்தியாவை சேர்ந்த என்னுடைய நண்பர்கள் பலர் இன்னும் அங்கு மாட்டிக் கொண்டுள்ளனர். போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை விமான டிக்கெட் கட்டணம் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. ஒருவேளை அந்தக் கட்டணம் குறைவாக இருந்திருந்தால் இன்னும் அதிகமான மாணவர்கள் என்னுடன் பயணம் செய்து தாயகம் திரும்பி இருப்பார்கள்.
மேலும் மேற்குப் பகுதியில் இருக்கும் மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் பத்திரமாக தான் இருக்கிறார்கள். உக்ரேன் கிழக்குப் பகுதியில் உள்ள மாணவர்கள் தான் மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளனர்.
பொதுவாகவே உக்ரைனில் தண்ணீர் விலைக்கு தான் வாங்க வேண்டும். ஆனால் தற்போது தண்ணீர், மளிகை பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் விரைவில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று என் நண்பர்கள் கூறுகின்றனர்.
மின்சாரம் நிறுத்தப்பட்டு தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டால் அவர்களின் பெற்றோர் மிகவும் அச்சத்திற்கு உள்ளாக நேரிடும். எனவே அதற்குள்ளாக அவர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu