தமிழகத்தில் அடுத்த கட்ட அகழாய்வுக்கு 3 இடங்கள் தேர்வு: அமைச்சர் தங்கம்தென்னரசு
தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைப் பறை சாற்ற, அடுத்த கட்டமாக அகழாய்வு நடத்துவதற்கு 3 இடங்களை தேர்ந்தெடுத்துள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த, தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்திப்பில் மேலும் கூறியதாவது:பொங்கல் விழா சென்னையில் நடைபெறுவது போல், சூழ்நிலைகளைப் பொறுத்து மற்ற மாவட்டங்களில் நடத்துவது குறித்து, முதல்வரிடம் ஆலோசனை செய்து வழிவகை காணப்படும். பொங்கல் விழா சென்னையில் 6 இடங்களில் நடத்த உள்ளோம், இணையதளங்கள் வழியாகவும் நடத்த திட்டமிடபட்டுள்ளது.
கீழடியில் அகழாய்வு முடிக்கப்பட உள்ள நிலையில், அடுத்த கட்டமாக அகழாய்வு நடத்துவதற்கு சில இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துளுக்கபட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும். இவை தவிர, தாமிரபரணி ஆற்றின் வழியிலே இருக்கக் கூடிய இடங்களில் முதல் கட்டமாக களஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அகழாய்வை பாதுகாப்பதற்காக ரூ.5 கோடியை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மையை நிறுவுவதற்கும், அறிவுப்பூர்வமான சான்றுகளை தருவதற்கு தமிழக அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். கீழடியின் ரூ. 12 கோடி செலவில், 34 ஆயிரம் சதுரடியில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் தங்கம்தென்னரசு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu