மதுரையில் மாபெரும் தமிழ்க்கனவு: பண்பாட்டு பரப்புரை
மதுரை,பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் (22.09.2023) நடைபெற்ற ”மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி
மதுரை,பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் (22.09.2023) நடைபெற்ற ”மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ” 'தீட்டு தீட்டு புத்தியைத் தீட்டு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது: தமிழ்நாடு அரசு, இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பெருமையையும் அறிந்து மேம்பட வேண்டும் என்ற நோக்கில் 'மாபெரும் தமிழ்க் கனவு' என்ற இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்காக நடத்தி வருகிறது.
இது ஒரு சிறப்பான முன்னெடுப்பு. இதற்காக தமிழ்நாடு அரசை நான் மனமார பாராட்டுகிறேன். தீண்டாமை என்ற கொடிய நடைமுறை இருந்தது. கடந்த 1924-ம் ஆண்டு வைக்கத்தில் நடைபெற்ற போராட்டம் என்பது, கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மகத்தான இடம் பிடித்த தீண்டாமைக்கு எதிரான போராட்டமாகும். 1924-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி வைக்கம் கோயில் தெருவில் நுழையும் சத்தியாகிரகப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுடன் தமிழகத்தில் இருந்து ஏராளமான தியாகிகள் சென்றுப் போராடினர். கேரளாவில் சமீபத்தில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
கல்வி தான் எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஏணி. "கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. கல்வியை ஆயுதமாகக் கொண்டவனை வீழ்த்துவது அத்தனை எளிதல்ல. தமிழ்நாடு வரலாற்றில் சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தால்இ கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக இருந்ததில்லை என்பதை அறிய முடியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், அவர் தன் கல்வி உரிமைக்காக எதிர்கொண்ட போராட்டம் ஒரு நெடிய வரலாறு. தீண்டாமை நெருங்காமை காணாமை என, அத்தனை அடக்குமுறைகளுக்கும் எதிராக நம் முன்னோர்கள் கண்ட ஒற்றைத் தீர்வு தான் கல்வி. இட ஒதுக்கீடு மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வியை கொண்டு சேர்த்ததன் மூலம் சமூகநீதி எழுச்சி பெற்றது என, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசினார்.இந்த நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu