மதுரையில் பலத்த மழை, சூறைக்காற்று: அம்மன் கோவில் பந்தல் சரிந்து விழுந்ததால் பக்தர்கள் பகீர்
மதுரையில் சூறைக்காற்று, மழை காரணமாக சரிந்து விழுந்த கோவில் அலங்கார சாரம்.
மதுரையில், தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு கட்டப்பட்ட அலங்கார சாரம் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், திடீரென சரிந்து மின்கம்பத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் சூழ்நிலையில், மாலையில், திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதுடன் மழை பெய்யத் துவங்கியது.
இந்நிலையில், மதுரை, எம்.கே.புரம் பகுதியில், உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு அமைக்கப்பட்டிருந்த சாரம் திடீரென சரிந்து மின் கம்பத்தின் மேல் விழுந்தது. இதனால், மின்கம்பி அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,சம்பவ இடத்திற்கு வந்த மின் ஊழியர்கள் சாரத்தை அப்பகுதி மக்களின் உதவியுடன் துரிதமாக அப்புறப்படுத்தினர். இதையடுத்து, மின் இணைப்பை மீண்டும் அமைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். அலங்கார சாரம் சரிந்து விழுந்த சமயத்தில் பந்தலுக்கு கீழே யாரும் நிற்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கூறுகையில், தண்டு மாரியம்மன் அருளால் தான் பெரும் உயிர் சேதமும், விபத்தும் தவிர்க்கப்பட்டுள்ளது என பக்தி பரவசத்துடன் குறிப்பிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu