மதுரையில் குடிமைப் பணி தொடர்பான கருத்தரங்கம்

மதுரையில்  குடிமைப் பணி தொடர்பான கருத்தரங்கம்
X

மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர்.

தேர்வில் ஆளுமை, தலைமைப் பண்பு, உடல்மொழி, அறநெறி, தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளை கணக்கீடு செய்யப்படும்

மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், மாவட்ட நிர்வாகம் மற்றும் READY தொண்டு நிறுவனம், அதன் தொழில்நுட்ப அறிவுரையாளராகிய கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து "உனக்குள் ஓர் ஐ.ஏ.எஸ்" எனும் தலைப்பில் நடத்திய குடிமைப் பணி தேர்வு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், பேசியதாவது:இந்தியக் குடிமைப் பணி என்பது மத்திய, மாநில அரசுகளின் கீழ் உள்ள அரசுப் பணிகளை மேலாண்மை செய்யும் முக்கிய பணியாகும். பெரும்பாலான இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிட வேண்டும் என்பதை இலட்சிமாக கொண்டு தேர்விற்காக கடுமையாக தங்களை தயார் செய்கின்றனர். இத்தேர்வானது முதன்மைத் தேர்வு, ஆளுமைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

குடிமைப் பணி தேர்விற்கு தயார் செய்யும் இளைஞர்கள் வெறுமனே புத்தக அறிவு மட்டுமல்லாமல் நாட்டு நடப்புகள், முக்கிய நிகழ்வுகள் போன்ற பல்வேறு தரவுகளில் தெளிவுடன் இருப்பது அவசியம். அதேபோல, தகவல் பரிமாற்றத் திறன், மொழித்திறன் ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஆளுமைத் தேர்வில் தேர்வர்களின் தனிப்பட்ட ஆளுமை, தலைமைப் பண்பு, உடல்மொழி, அறநெறி, தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் உள்ளிட்ட பண்புகளை கணக்கீடு செய்து சரியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நான், கேரளா மாநிலத்தில் அரசு மருத்துவராக பணியாற்றி வந்தபோது, கொச்சியில் கேரள அரசின் மூலம் நடத்தப்பட்ட பயிற்சி மையத்தில் பயின்று 2011-ஆம் ஆண்டு என்னுடைய முதல் முயற்சியிலேயே இந்தியக் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இளைஞர்கள் தங்களது விருப்பப் பாடத்தில் ஆழ்ந்த ஞானம், நல்ல மொழித்திறனுடன் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இத்தேர்வினை எளிதில் வெற்றி பெறலாம். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து READY தொண்டு நிறுவனம், அதன் தொழில்நுட்ப அறிவுரையாளராகிய கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்.அகாடமி இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கு பாராட்டுதலுக்குரியது. இதனை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தார்.

தொடர்ந்து, இக்கருத்தரங்கில் பங்கேற்ற இளைஞர்கள் குடிமைப் பணி தேர்வு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்புடைய நிபுணர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், யு.பி.எஸ்.சி முன்னாள் சேர்மன் டி.பி.அகர்வால் , HCL இயக்குநர் (மதுரை) திருமுருகன் , ரெடி தன்னார்வ அமைப்பு தலைவர் மு.பூமிநாதன் , ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!