தீபாவளி இனிப்புகளில் கலரிங் சேர்த்தால் தண்டனை- அதிகாரிகள் எச்சரிக்கை
மதுரையில் நடந்த இனிப்பு தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராம் பாண்டியன் பேசினார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரகாலமே உள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையின்போது ஒவ்வொருவர் வீட்டிலும் முக்கிய இடம் பிடிப்பது புத்தாடை, இனிப்பு வகைகள், பட்டாசு ஆகியவை ஆகும். இந்த மூன்றில் எது குறைந்தாலும் தீபாவளி பண்டிகை நிறைவு பெறாது என்பது தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல், நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகை களை கட்டவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா பிரச்சினை இல்லாததால் கடைவீதிகளில் புது துணிகள் எடுப்பதற்காக ஜவுளி கடைகளை நோக்கி மக்கள் படை எடுத்த வண்ணம் உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க விதவிதமான இனிப்பு மற்றும் காரவகை பொருட்களை தயாரிப்பதிலும் வியாபாரிகள் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.100 க்கும் மேற்பட்ட ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. முக்கியமாக ஆர்.சி. மற்றும் லைசன்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். உணவு பொருளை பார்சல் செய்வோர் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட லேபிள்களை பயன்படுத்த வேண்டும். அதில் ,உணவு தயாரிப்பு தேதி, காலாவதியாகும் நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருப்பது அவசியம். உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி வணிகத்தில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 'கலரிங்' சேர்க்கக் கூடாது. இது நுகர்வோர்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என அறிவுரை வழங்கினார்கள்.
அதோடு அதிரடியாக கடைகளில் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. உணவு தயாரிப்பு கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துபவர் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தரலாம். வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிரலாம் என்றும் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu