சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி இரும்பாடி, நாச்சிகுளம், கரட்டுப்பட்டி, பொம்மன்பட்டி, மேல் நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் அறுவடை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையத்தை கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மனட்டி கிராமத்தில் அமைத்து இருந்தது. ஆனால், நெல் கொள்முதல் நிலையம் அமைத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்லை அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில், அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல் ஒரு சில விவசாயிகள் தனியாருக்கு நெல்லை ஏற்றுமதி செய்ய முடிவு எடுத்தனர். இதனால் சுமார் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் களத்தில் குவிக்கப்பட்டிருந்த நெல்லை மூடையாக கட்டி இரவோடு இரவாக தனியார் வியாபாரிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறும் போது: அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து முறையாக ஏற்றுமதி செய்யாததால், 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,நெல்லை மூடையாக கட்டி களத்தில் குவிக்கப்பட்டு பல நாட்கள் வைத்திருப்பதால் நெல்லின் எடை குறைந்து ஏக்கருக்கு 5000 வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முறையாக பதில் கூறவில்லை என்றும் தெரிவித்தனர் .
7 ஏக்கர் விவசாயம் செய்த விவசாயி கூறும்போது: 20 நாட்களுக்கு முன் நெல் அறுவடை செய்து களத்தில் கொட்டி வைத்திருந்து அரசு கொள்முதல் நிலையத்தில் நெல்லை எடுப்பார்கள் என, காத்திருந்து எந்த பலனும் இல்லை ஆகையால், நாளுக்கு நாள் நெல்லின் எடை குறைந்து எதிர்பார்த்த விலை கிடைக்காது என்பதால், தனியார் வியாபாரிகளுக்கு நெல்லை ஏற்றுமதி செய்துள்ளேன்.
ஏழு ஏக்கரில் நெல் அறுவடை செய்த எனக்கு, இதன் மூலம் 35 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. என்னைப்போல், பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தனியாருக்கு நெல்லை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இனியாவது அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனடியாக எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், அடுத்து வரும் காலங்களில் நெல் உற்பத்தி செய்யவே கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார். அரசு நடவடிக்கை எடுக்குமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu