சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க மதுரையில் இருந்து புறப்பட்டார் ஓ.பி.எஸ்.
தமிழகத்தில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.முக. ஒற்றை தலைமை விவகாரத்தில் இரண்டாக பிளவு பட்டு அ.தி.மு.க.ஓ.பி.எஸ். அணி, அ.தி.மு.க. இ.பி.எஸ். அணி என இரண்டாக செயல்பட்டு வருகிறது. கட்சியில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என அறிவித்துள்ளார்.
இதற்காக நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் கட்சிக்கு விரோதமாக செயல் பட்டதாகவும், கட்சிக்கு துரோகம் செய்ததாகவும் கூறி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார்.
இது சம்பந்தமாக எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே சட்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் அதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொது குழு கூட்டம் செல்லாது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.அந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளார். இந்த வழக்கில் ஓ.பி.எஸ். தரப்பிலும் இ.பி.எஸ். தரப்பிலும் தங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை விளக்கி கூறி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்கள். இந்த வழக்கில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
இந்த சூழலில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரை நிரந்தர பொது செயலாளருக்கான தேர்தல் நடத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிபந்தனை விதித்து இருப்பதால் அவர் நடத்திய கூட்டத்தில் இது பற்றி எதுவும் பேசப்படவில்லை. அடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையும் கூட்ட இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் இது நாள் வரை பெரிய குளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி இருந்து தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சந்தித்து பேசி வந்த ஓ. பன்னீர்செல்வம் நாளை தொடங்க இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசு மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட வேண்டிய, நிறைவேற்றாத கோரிக்கைகள் பல்வேறு பிச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம் என்றார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி சபாநாயகரிடம் கொடுத்த கடிதம் குறித்த கேள்விக்கு சட்டப்பேரவையை பொறுத்தவரை பேரவைத்தலைவர் எடுக்கும் ம முடிவு தான் இறுதியானது. சபாநாயகரின் தீர்ப்பிற்கு கட்டுப்படுவோம் என்றார்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அருகே அமருவீர்களா என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்சியை எந்த நோக்கத்திற்காக வளர்த்தார்களோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் செயல்பாடு நடவடிக்கை இருக்கும். தொண்டர்களின் அடிப்படை உரிமையை காக்கவே ,எம்.ஜி.ஆர். சட்ட விதிகளை உருவாக்கி அதை பாதுகாத்தார். அதை தொண்டர்களிடம் இருந்து பறிபோகாமல் காப்பதே எங்கள் நோக்கம் ஆகும். தொண்டர்களிடம் இருந்து பறிபோகாமல் காப்பதே எங்கள் நோக்கம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu