.மதுரை ஐ.டி. கம்பெனி விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொடர்பில்லை
மதுரையில் பேட்டியளித்த ஐடி நிறுவன நிர்வாகி.
மதுரை :
மதுரை மாடக்குளத்தில் உள்ள ஐடி நிறுவன ஏல விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்று ஐடி கம்பெனி பெண் நிர்வாகி பிரியதர்ஷினி கூறினார்.
மதுரை மாடக்குளம் கிளாஸ்ரிக்கோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் ஐடி நிறுவன நிர்வாக இயக்குனர் பிரியதர்ஷினி விஷ்ணு பிரசாத் அளித்த பேட்டி:
மதுரை மாடக்குளத்தில் எங்களுக்கு சொந்தமான கிளாஸ்ரிக்கோ சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜூலை 2 ம் தேதி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு எங்களுடைய நிறுவனத்தை திறந்து வைத்து ஊழியர்களுக்கு பணி நியமன சான்றிதழ் வழங்கினார்.
நாங்கள் மேற்படி நிறுவன இடத்தை கனரா வங்கியிடமிருந்து ஏலத்தில் ரூபாய் 75 லட்சம் செலுத்தி வாங்கினோம் . அதன்படி கனரா வங்கி எங்களுக்கு மேற்படி இடத்தை பதிவு செய்து கொடுத்துள்ளது. இதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இந்நிலையில், மேற்படி நிறுவன இடத்துக்கு உரிமையாளரான சதாசிவம் என்பவர் ரூபாய் இரண்டரை கோடி மதிப்பிலான சொத்தை கனரா வங்கி நிறுவனம் 75 லட்சத்துக்கு ஏலம் வழங்கியதின் பின்னணியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
எங்களுடைய ஐ டி நிறுவனத்திற்கும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எவ்வித தொடர்பும் துளியும் கிடையாது. அவருடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கின்ற வகையில், எதிர்க்கட்சிகள் தூண்டுதல் பெயரில் சதாசிவம், சந்திரசேகர் ஆகிய இருவரும் அவதூறு பரப்பி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை மேற்படி சொத்து தொடர்பாக சதாசிவம், சந்திரசேகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உள்ளது.
அதன் அடிப்படையில், கனரா வங்கி ஏலத்தில் வெளியிட்ட சொத்தை நாங்கள் ரூபாய் 75 லட்சத்திற்கு வாங்கி நடத்தி வருகின்றோம் . எனவே, அவர்களுடைய குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் கிடையாது. எங்களுடைய நிறுவனத்திற்கு வங்கி வாயிலாக ஏலத்தில் சொத்து வாங்கியதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு துளியும் தொடர்பு கிடையாது'. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், பார்வையாளர் கார்த்திக் பிரபு , பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில ஐடி பிரிவு செயலாளர்கள் விஷ்ணு பிரசாத் , விசுவநாதன் ஆகியோர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu