மறைந்த கருமுத்து கண்ணன் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் மறைவுயொட்டி அன்னாரது உடலுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் , மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன் மாநகராட்சி ஆணையாளர் சித்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் இருந்தனர்.
மேலும், மதுரை முக்கிய பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் பலர் மாலை அணிவித்து கருமுத்து தி. கண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்த பெருமைக்கு சொந்தக்காரர்..
பிரபல தொழிலதிபரும் மீனாட்சி அம்மன் கோயில் தக்காருமான கருமுத்து தி. கண்ணன்(70) உடல் நலக்குறைவால் மதுரையில் நேற்று காலமானார்.
தென் மாவட்டங்களில் பெரும் தொழிலதிபராகத் திகழ்ந்தவரும் கலைத்தந்தை என அழைக்கப்பட்டவருமான கருமுத்து தியாகராசர் செட்டியார்-ராதா தம்பதியரின் மகன் கருமுத்து தி. கண்ணன். இவர் மதுரை கோச்சடையில் வசித்து வந்தார். திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரி, தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தலைவராகவும், கப்பலூரில் உள்ள தியாகராசர் நூற்பாலை இயக்குநராகவும் இருந்தார்.
மேலும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக 2006 முதல் தொடர்ந்து 18 ஆண்டு களாகப் பதவி வகித்தார். 2009-ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அபிமானத்தைப் பெற்றதால் ஆட்சிகள் மாறியபோதும் கோயில் தக்கார் பதவியில் தொடர்ந்தார்.
முந்தைய திமுக ஆட்சியில் மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்தார். தற்போதைய இந்து சமய அறநிலையத் துறை உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளில் கருமுத்து தி.கண்ணன் பங்கேற்கவில்லை. மதுரை கோச்சடையில் உள்ள வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை காலமானார். இவருக்கு மகன் ஹரி தியாகராஜன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu