மதுரையில் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு : அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!

மதுரையில் பலத்த மழையால் வெள்ளப் பெருக்கு : அமைச்சர்கள் நேரில் ஆய்வு..!
X

அமைச்சர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

மதுரையில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள்,அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மதுரையில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள்,அதிகாரிகள் பார்வையிட்டனர்.

மதுரை.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ,தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்டு கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் , தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

குறிப்பாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, மதுரை மாநகராட்சிக்குட்பட்ட குலமங்கலம் மெயின் சாலை, செல்லூர் கண்மாய், செல்லூர் கண்மாய் மறுகால் கால்வாய், பந்தல்குடிபாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும், தனியார் மண்டபத்தில் கன மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தயாரிக்கப்படும் உணவின் தரத்தை பரிசோதனை செய்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், மதுரையில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென எங்களுக்கு உரிய அறிவுரை வழங்கினார். அதனடிப்படையில், மதுரை மாநகராட்சிக்குட்பட்டு கனமழைகள் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, பந்தல்குடி கால்வாய் வழியாக வரும் தண்ணீர் கால்வாயில் கொள்ளளவை விட அதிகமாக இருக்கும் காரணத்தினால் கால்வாயையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த கால்வாயை ஆழப்படுத்தவும், அகலப்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இங்கு உள்ள அமைச்சர்கள் தெரிவித்துள்ளார்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், உடனடி தீர்வாக செல்லூர் கண்மாயிலிருந்து புதிதாக தற்காலிக கால்வாய் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை காலை 10 மணிக்குள் இந்த கால்வாய் அமைக்கும் பணி நிறைவேற்றப்படும் என, மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை விரைவாக வைகை ஆற்றிற்கு கொண்டு செல்ல முடியும். கனமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும்

சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே மிகக் குறுகிய காலத்தில் மிக கனமழை பெய்தும் பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டத்தில் எத்தகைய கனமழை பெய்தாலும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காணும் விதமாக தேவையான திட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பித்திட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் , கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நிதி ஒதுக்கீடு பெற்று நிரந்தர தீர்வு காணப்படும் என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் டாக்டர். அருண் தம்புராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ்குமார்,

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் , சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு) உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!