மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி
மதுரை ஆலாத்தூர் ஊராட்சியில் உள்ள பி.ஆர்.மகாலில் , ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , 572 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 66 இலட்சத்து 16 ஆயிரத்து 862 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கில் ”மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை கடந்த 18.12.2023-அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து, மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 18.12.2023 தொடங்கி 06.01.2024 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து 9539 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில், இதுவரை 8143 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படாத 88 மனுக்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி தீர்வு காணும் வகையில் "உங்களைத் தேடி. உங்கள் ஊரில்" திட்டத்தினை செயல்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் , தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று அவர்தாம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிடும் நோக்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இத்தகைய சிறப்பு வாய்ந்த மக்கள்நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், ”எல்லோரும் எல்லாம்” பெற வேண்டும் என்ற நோக்கத்தை மெய்ப்பிக்கும் வகையில், ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் அத்திட்டத்தின் வாயிலாக மக்கள் முழுமையாக பயன்பெறுவார்களா என்பதை நோக்கமாக கொண்டுதான் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.
மதுரை ஆலாத்தூர் ஊராட்சியில், இன்றைய தினம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் மூர்த்தி , பல்வேறு துறைகள் மூலம் சக்கர நாற்காலி, காலிப்பர், காதொலி கருவி, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், இரண்டு பெண் குழந்தைகள் உதவித் தொகை, தேய்ப்பு பெட்டி, உலமா அட்டை, தொழில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 572 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 66 இலட்சத்து 16 ஆயிரத்து 862 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் வீரராகவன், ஆலாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu