அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்

அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்
X

அரசின் சாதனை மலரை வெளியிட்ட மாவட்ட  ஆட்சியர் அனீஸ்சேகர்

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் வெளியிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம் என்ற தலைப்பில் சிறப்பு மலரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், பல்வேறு அரசு துறைகளின் சார்பாக 52 பயனாளிகளுக்கு ரூபாய் 18.14 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

.தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த ஓராண்டில் மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற மக்கள் நல திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 114 கோடி மதிப்பீட்டில் "முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்" கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நூலகம் 6 மாடி கட்டிடமாக கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் பணிகள் 100 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்படும்.

கடந்த ஓராண்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 5523 கணினி பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட இடங்களுக்கு 5709 கணினி பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. வீடற்ற ஏழைகளுக்கு 538 கணினி பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மாறுதல் மற்றும் திருத்தம் தொடர்பாக 181 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து 956 மனுக்கள் பெறப்பட்டு தகுதியான 764 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளான பிறப்புச்சான்றிதழ், வகுப்புச்சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் மொத்தம் 316563 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. மாதாந்திர உதவித்தொகை பெறும் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் தற்போது 154200 பயனாளிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். அவற்றில் கடந்த ஓராண்டில் மட்டும் 14047 பயனாளிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்தொற்றின் காரணமாக உயிரழந்த 2802 நபர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் விகிதமும் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் 48 நபர்களுக்கு மொத்தம் ரூபாய் 11.80 கோடி மதிப்பீட்டிலும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த 277 குழந்தைகளுக்கு ரூபாய் 8.65 கோடி மதிப்பீட்டில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 44254 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் 98 சதவிகிதம் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 85 ஊராட்சிகளில் ரூபாய் 37.72 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் . 132 நூலகங்களில் ரூ. 2.15 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு நிதி மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூபாய் 3.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பண்ணை குட்டைகள் தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டம் உயர உறிஞ்சு குழிகள் என மொத்தம் 1800-க்கும் மேற்பட்ட நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

மகளிர் திட்டத்தின் கீழ்1489 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 16656 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 700 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்திறன் பயற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் 2230 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். வாழ்வாதார தொழில் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 818 நபர்களுக்கு ரூபாய் 7.08 கோடி மதிப்பீட்டில் நலிவுற்றோர் நிதி வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக, நீட்ஸ் திட்டத்தின் கீழ் 43 இளைஞர்களுக்கு ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் சுயதொழில் வழங்க கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தாட்கோ மூலம் 400 நபர்களுக்கு ரூபாய் 26.19 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு கடந்த கல்வியாண்டில் மட்டும் ரூபாய் 100.50 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவதற்காக 28 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 85.9 சதவிகிதம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும் 61.5 சதவிகிதம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூபாய் 13.20 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 19 மருத்துவமனைகளில் 2908 நபர்கள் ரூபாய் 2.66 கோடி மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 44 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 6169 பயிற்சி மையங்கள் செயல்படுத்தப்பட்டு 1.34 இலட்சம் மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் 4 பயிலரங்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 322 பள்ளிகளைச் சார்ந்த 36 ஆயிரம் மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர்.

வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட விவசாயிகளின் உழைப்பின் மூலம் கடந்த ஆண்டில் மாவட்டத்தில் 59 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு நெல் சாகுபடி செய்யப்பட்டு 3.70 மெட்ரிக் டன் அளவில் உணவு தானியங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மானாவாரி தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்கு 22 ஊராட்சிகளில் வேளாண் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 39 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 40 பயனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் நோக்கில் கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுவதற்கு நிரவாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கட்டுமானப் பணிகள் துவங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

சாலி தளபதி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர்

சௌந்தர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!